ஊரடங்கு நேரத்தில் சாலையில் அலை மோதிய பொதுமக்கள் கூட்டதால் திருச்சி மாவட்டம் பரபரப்பாக காணப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றை கட்டுபடுத்துவதற்காக அரசு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் திருச்சி மாவட்ட மக்கள் மதியம் 12 மணி வரை தனது சொந்த இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்களில் சாலையில் சாதாரணமாக வலம் வருகின்றனர். இதனை அடுத்து காந்தி சந்தைப் பகுதியில் மளிகை பொருட்கள் மற்றும் காய்கறி பொருட்கள் வாங்க ஏராளமானவர்கள் காரில் வந்து செல்கிறார்கள். இவ்வாறு பொதுமக்கள் தங்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்காக சாலை பகுதிகளில் நடமாடுவதால் அங்கு இயல்பு நிலையில் இருப்பது போன்று உள்ளது. இதனை அடுத்து பகல் 12 மணி ஆனதும் முக்கிய சாலையில் பேரிகாட் அமைத்து காவல்துறையினர் அப்பகுதியை தடை செய்துள்ளனர்.
இதனை தொடர்ந்து காந்தி மார்க்கெட் சில்லரை வியாபாரிகளுக்கு 11:45 மணி அளவில் கடைகளை அடைக்க வேண்டும் என ஒலி பெருக்கி மூலம் எச்சரிக்கை செய்து 12 மணி அளவில் அனைத்து கடைகளும் மூடப்படுகின்றது. அதன் பின் காந்தி மார்க்கெட்டில் இருந்து பெரியகடைவீதி செல்லும் சாலை பகுதியில் இரு சக்கர வாகனங்கள் கூட செல்ல முடியாத அளவில் பகல் 12 மணிக்கு மேல் தடுப்பு ஏற்படுத்தி தடை செய்யப்பட்டது. இதேபோல் தலைமை தபால் நிலையம் அருகில் உள்ள ரவுண்டானா சாலை பகுதிகளில் இரும்பு தடுப்பு வைத்து அடைக்கப்பட்டுள்ளது.