தமிழகத்தில் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்ற நிலையில் அவருக்கு இளைஞர் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை ஒதுக்கப்பட்டுள்ளது. திமுக கட்சியின் அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள் உட்பட நிர்வாகிகளும் உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில் யாரும் எதிர்பார்க்காத விதமாக திடீரென உதயநிதிக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியானது. இந்த அறிவிப்பு திமுகவினர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும் பாஜக மற்றும் அதிமுக உட்பட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்கியதை விமர்சித்து வந்தது.
இந்நிலையில் திமுக கட்சியின் மூத்த அமைச்சர் கே.என். நேரு செய்தியாளர்கள் சந்திப்பில் சொன்னது தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலத்தில் உள்ள கோட்டை மைதானத்தில் பேராசிரியர் க. அன்பழகன் நூற்றாண்டு பொதுகுழு கூட்டத்தில் கலந்துகொண்ட அமைச்சர் கே.என் நேரு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, எடப்பாடி காலத்தில் தமிழகத்தில் தேன் ஆறும், பாலாறும் ஓடியதா?. உதயநிதிக்கு பதவி கொடுத்தது வாரிசு அரசியல் கிடையாது.
திமுக கட்சியை கட்டி காத்த தலைவருக்கும், அவருடைய குடும்பத்தினருக்கும் நேர்மையாக இருந்து நாங்கள் பாடுபடுவோம். நாங்கள் அவர்களுக்கு விசுவாசமாக இருக்காமல் வேறு யாருக்கு விசுவாசமாக இருப்போம். உதயநிதி ஸ்டாலின் மட்டுமல்ல அவருடைய மகன் இன்பநிதி வந்தாலும் கூட நாங்கள் வாழ்க என்று சொல்லி வரவேற்க தான் செய்வோம் என்று கூறினார். மேலும் அமைச்சர் கே.என் நேரு இப்படி பேசியது அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.