அதிமுகவின் வெற்றியில் பாஜகவிற்கு பங்குள்ளது என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நடந்து முடிந்த விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 21_ஆம் தேதி நடைபெற்று அதன் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டது. அதில் திமுக கூட்டணி வசம் இருந்த இந்த இரண்டு தொகுதிகளில் அதிமுக வேட்பாளர் அபார வெற்றி பெற்று 2 தொகுதிகளையும் கைப்பற்றினர். இந்த வெற்றியை முழுவதும் உள்ள அதிமுக தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர்.
மருதுபாண்டியர்கள் நினைவு தினத்தை ஒட்டி திருப்பத்தூரில் உள்ள நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பிறகு செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறுகையில், பாரதிய ஜனதா கட்சி ஒரு மாபெரும் சக்தியாக நாடு முழுவதும் உருவாகி வருகிறது. தமிழகத்தில் ஒரு மாபெரும் சக்தியாக உருவாகி இருக்கிறது என்பதை இந்த இடைத்தேர்தலும் காட்டுகின்றது.
பாரதிய ஜனதா கட்சியை தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய ஒவ்வொரு தமிழனும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றார்கள்.இந்நிலையில் இனி வருகின்ற காலம் தமிழ்நாட்டில் பாஜக கட்சியின் காலமாக மட்டுமே இருக்க முடியும். நாங்க மட்டும் இல்லை என்றால் அதிமுக வென்றிருக்க முடியாது. எங்களுடைய கூட்டணி வாழ்த்துகின்றோம். எங்களுடைய கட்சியும் தேர்தலுக்கு வேலை செய்தது. நானும் பிரசாரத்திற்கு சென்றிருந்தேன் என்று முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.