Categories
அரசியல் மாநில செய்திகள்

நாங்க கூட்டணி கட்சி… பார்த்து அறிக்கை விடுங்க… கம்யூனிஸ்ட் கட்சிக்கு DMK பதிலடி ..!!

மின் கட்டண உயர்வு குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்த நிலையில், கூட்டணி கட்சி தலைவர்களின் அறிக்கை எதிரிகளின் வாய்க்கு அவலாகி விடக்கூடாது என்று திமுகவின் முரசொலி நாளிதழ் அறிவுறுத்தி இருக்கிறது.

சிலந்தி என்ற பெயரில் முரசொலி நாளிதழில் எழுதப்பட்டிருக்கக் கூடிய கட்டுரையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆளும் கேரள மாநிலத்தில் கூட அண்மையில் மின்கட்டணம் உயர்த்தப்பட்டது சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது. வேறு வழியற்ற நிலையில்தான் கேரளா அரசு, மின் கட்டண உயர்வை அறிவித்திருக்கும் என்பது பாலகிருஷ்ணனுக்கும் தெரிந்திருக்கும் என்று கூறியுள்ள அந்த கட்டுரையில், எந்த அரசாக இருந்தாலும் சூழ்நிலை காரணமாக இது போன்ற கட்டண உயர்வை அறிவிக்க வேண்டிய நிலை உருவாக்கி விடுகிறது என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

தமிழகத்தில் 100 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்துவோருக்கு  கட்டணம் உயர்வு இல்லை என்றும், இன்னும் கேரளாவில் நூறு யூனிட் வரை உபயோகிப்பவர்களுக்கு கூட 20 காசு உயர்த்தப்பட்டுள்ளதாகவும் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கூட்டணி கட்சி தலைவர்கள் விடும் அறிக்கைகள், பூமராங் போல திருப்பி விடக்கூடாது என்பதில் எச்சரிக்கை தேவை என்றும், திமுக தமது கூட்டணி கட்சி என்பதை உணர்ந்து பாலகிருஷ்ணன் அறிக்கையை வெளியிட்டு இருக்கலாம் எனவும், தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்டணியை முறித்து விட சந்தர்ப்பம் கிடைக்காதா என்று ஒரு கூட்டம் காத்துக்கொண்டிருப்பதாகவும், அந்த வஞ்சக கூட்டத்தின் வாய்க்கு அவல் கிடைத்தால் என்னவாகும் என்றும் கட்டுரையில் கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது.

Categories

Tech |