மாஸ்டர் படத்தால் எங்களது முடிவை மாற்றிக் கொண்டோம் என்று சுல்தான் படத் தயாரிப்பாளர் கூறியுள்ளார்.
முன்னணி நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள படம் சுல்தான். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரித்துள்ள இப்படத்தை பாக்யராஜ் கண்ணன் இயக்கியுள்ளார். மேலும் விவேக்-மெர்வின் இசையமைத்துள்ளார். இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார்.
பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகியுள்ள இப்படம் வரும் ஏப்ரல் 2ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு இன்று நடைபெற்ற பேட்டியில் கூறியதாவது, “சுல்தான் திரைப்படத்தை ஓடிடியில் வெளியிட முடிவு செய்தோம். அதற்காக பிரபல ஓடிடி நிறுவனத்திடம் விற்க முயற்சி செய்தோம்.
ஆனால் படத்தின் மீது இருந்த நம்பிக்கையாலும், திரையரங்குகளில் மாஸ்டர் படத்திற்கு கிடைத்த வரவேற்பை பார்த்ததாலும் எங்கள் முடிவை மாற்றிக் கொண்டோம். சுல்தான் படத்தின் ஆரம்ப கட்டத்தில் இப்படத்தை இரண்டு பாகங்களாக எடுக்க திட்டமிட்டு இருந்தோம். ஆனால் பாகுபலி படத்தின் எழுத்தாளரான விஜயேந்திர பிரசாத் கொடுத்த அறிவுரையால் சுல்தான் படத்தை ஒரே பாகமாக எடுத்துள்ளோம்” என்று கூறினார்.