தமிழகத்தின் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழ்மொழியின் மீதும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு ஏற்பட்டுள்ள அக்கறைக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால் அண்ணா காலத்தில் இருந்து தற்போது உள்ள முதல்வர் ஸ்டாலின் ஆட்சி காலம் வரை தமிழகத்தில் தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக செய்தவற்றை அமித்ஷாவுக்கு ஞாபகப்படுத்த விரும்புகிறேன். இந்தியாவில் ஆட்சி மொழி தேர்வுகளை தமிழில் எழுதினால் வெற்றி பெறுவார்கள் என்பதற்காக தான் தாய் மொழி தமிழ் மொழி வரலாறு வெளியிடப்பட்டது.
இதுதான் முதலில் கிடைத்த வெற்றி. அதன் பிறகு 10-ம் வகுப்பு வரை பள்ளி படிப்புகளில் தமிழ் மொழியை கட்டாயமாக்க வேண்டும் என்ற சட்டம் திமுக ஆட்சிக்காலத்தில் இயற்றப்பட்டு உச்ச நீதிமன்றத்திடம் அனுமதி பெறப்பட்டது. அதோடு உயர்கல்வியிலும் தமிழ் வழியில் படிக்கும் மாணவர்களுக்கு உதவி தொகை வழங்கும் திட்டமானது திமுக ஆட்சி காலத்தில் அறிமுகப் படுத்தப்பட்ட நிலையில், தற்போது 900 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. அனைத்து மாணவர்களும் பொறியியல் படிப்பை தாய்மொழியில் கற்க வேண்டும் என அமித்ஷா கூறியுள்ளார்.
ஆனால் கடந்த 2010-ம் ஆண்டு தமிழகத்தில் திமுக ஆட்சி காலத்தின் போதே பொறியியல் படிப்பில் தமிழ் வழியில் அறிமுகப்படுத்தப்பட்டு விட்டது. இந்தியாவில் முதன்முதலாக தமிழகத்தில் தான் பொறியியல் படிப்பு தமிழில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி அண்ணா பல்கலைக்கழகத்தில் சிவில், மெக்கானிக்கல் படிப்புகள் தமிழ் மொழியில் அறிமுகம் செய்யப்பட்டு தற்போது வரை பின்பற்றப்படுகிறது. அண்ணா பல்கலைக்கழகத்தில் தமிழ் வழியில் பொறியியல் படித்த நிறைய பேர் தற்போது நல்ல வேலைகளில் இருக்கிறார்கள்.
கடந்த 12 வருடங்களுக்கு முன்பாகவே பொறியியல் படிப்பை தமிழில் அறிமுகப்படுத்தினாலும் தற்போது மருத்துவ படிப்பையும் தமிழில் அறிமுகப்படுத்துவதற்கான தீவிர முயற்சியை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. இதற்காக 3 பேராசிரியர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டு மருத்துவ படிப்பு புத்தகங்களை தமிழில் மொழிபெயர்க்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தமிழ் மொழியை தொன்மையான செம்மொழி என உள்துறை அமைச்சர் ஒத்துக் கொண்ட நிலையில் சமஸ்கிருத மொழியை போன்று உயரிய தமிழ் மொழிக்கும் நிதி ஒதுக்க வேண்டும்.
தமிழ் மொழியை ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டும் எனவும் அமித்ஷாவிடம் கேட்டுக்கொள்கிறேன். இதில் குறிப்பாக மத்திய அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் மொழியை கட்டாயம் படமாக மாற்ற வேண்டும். மேலும் ஜவர்கலால் நேரு பல்கலைக்கழகங்களில் பல வருடங்களாக நிரப்பப்படாமல் இருக்கும் தமிழ் பேராசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்புவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.