டெட் தேர்வில் ஒரு சதவீதத்திற்கும் குறைவான தேர்ச்சி விகிதம் வந்துள்ளது இதற்கு வினாத்தாள் கடுமையாக எளிதாக பலரும் குற்றம் சாட்டி வந்த நிலையில் அதற்கான காரணத்தை டிஆர்பி அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.
கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும் என்ற விதிமுறை தமிழகத்தில் 2011ஆம் ஆண்டு முதல் அமலில் இருந்தது. இந்த வகையில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை கற்பிக்கும் இடைநிலை ஆசிரியர் பணிக்கான ஆசிரியர் தகுதித் தேர்வின் முதல் தாள் கடந்த ஜூன் மாதம் எட்டாம் தேதி நடைபெற்றது. ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர் தகுதித் தேர்வின் இரண்டாம் தாள் ஜூன் 9 ஆம் தேதி நடைபெற்றது. முதல் தாள் தேர்வில் தமிழகம் முழுவதும் 1,62,333 பேர் எழுதினர்.
அதன் முடிவுகள் நேற்று வெளியான நிலையில் 482 பேர் மட்டுமே தேர்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான இரண்டாம் தாள் முடிவுகள் வெளியாகி உள்ளன. இதில் ஒரு சதத்திற்கும் குறைவானவர்களே தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வு எழுதியவர்களின் எண்ணிக்கை 3,79,733 அதில் 324 பேர் மட்டுமே தேர்ச்சி அடைந்துள்ளனர். 150 மதிப்பெண்களுக்கு நடைபெற்ற இந்த தேர்வில் பிற்படுத்தப்பட்ட பட்டியலுக்கான குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் 82 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது.
பொதுப் பிரிவுக்கு குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் 90 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் 324 பேர் மட்டுமே 82 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர். அதிகபட்ச மதிப்பெண் 96 ஆக உள்ளது. ஓஎம்ஆர் ஷீட் சரியான விடையை தேர்வு செய்து குறிப்பிடுவதில் பெரும்பாலானவர்கள் தவறு செய்துள்ளதால் விடைத்தாள்களை மதிப்பீடு செய்வதில் சிரமம் இருந்ததாக ஆசிரியர் தேர்வு வாரியம் விளக்கம் அளித்துள்ளது. முதல் தாள் போலவே இரண்டாம் தாளிலும் கேள்விகள் மிக மிகக் கடுமையாக இருந்ததாக மாணவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதனிடையே வினாத்தாள் கடினமாக தயாரிக்கப்பட்டதற்கான காரணம் என்ன என்பதை டிஆர்பி அதிகாரிகள் விளக்கியுள்ளனர். தமிழக அரசின் பாடத் திட்டம் இந்த ஆண்டு 1 முதல் 12-ஆம் வகுப்பு வரை மாற்றி அமைக்கப் பட்டுள்ளதால் அதற்கு ஏற்றவகையில் தகுதியானவர்களை தேர்வு செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் வினாக்கள் கடினமாகபட்டதாக அவர் கூறியுள்ளார். அதே வேளையில் தேர்வில் தோல்வி அடைந்தவர்களுக்கு ஏற்கனவே காலியாக உள்ள இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதால் ஆர்வம் இல்லாமல் போனதும் இதற்கு காரணம் என்றும் தெரிவித்துள்ளனர்.