புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு எந்த டிக்கெட்டையும் நாங்கள் விற்கவில்லை என ரயில்வே விளக்கம் அளித்துள்ளது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் மே 17ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் புலம்பெயர் தொழிலாளர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் தவித்து வருகின்றனர். தங்களது குடும்பத்தினருடன் இருக்க சொந்த ஊர் செல்ல விரும்புகின்றனர். இதைத் தொடா்ந்து பல்வேறு மாநில அரசுகள், தொழிலாளர்களை அவரது சொந்த ஊருக்கு அனுப்ப சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வேயிடம் கோரிக்கை விடுத்ததை அடுத்து, அதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
இதனால் மாநில அரசின் ஒப்புதலுடன் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சிறப்பு ரயில் மூலமாக சொந்த ஊர்களுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு தொழிலாளர்களிடம் கட்டணம் வசூலிப்பதாக தகவல் வெளியான நிலையில் பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள ரயில்வே நிர்வாகம், புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு எந்த டிக்கெட்டையும் நாங்கள் விற்கவில்லை என தெரிவித்துள்ளது.
மாநிலகங்கள் வழங்கிய பட்டியல்களின் அடிப்படையில் பயணிகளை ஏற்றி செல்கிறோம். நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து இதுவரை 34 சிறப்பு ரயில்களை இயக்கி உள்ளோம். சிறப்பு ரயிலில் பயணம் செய்வோர் சமூக இடைவெளியை பின்பற்றி பயணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று தகவல் அளித்துள்ளனர். மேலும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு இலவச உணவு, குடிநீர் வழங்கப்படுகிறது.
சமூக பொறுப்புடன் ஏழைகளுக்கு பாதுகாப்பான பயணங்களை வழங்கி வருகிறோம் என விளக்கம் அளித்துள்ளனர். முன்னதாக புலம்பெயர்ந்த தொழிலாளர்களிடம் கட்டணம் வசூலிப்பதற்கு சுப்ரமணிய சுவாமி கண்டனம் தெரிவித்துள்ளார். கட்டணம் வசூலிப்பது தொடர்பாக ரயில்வே அமைச்சகத்திடம் பேசி உள்ளேன். புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இனி இலவசமாக சிறப்பு ரயிலில் பயணிக்கலாம் என ரயில்வே அமைச்சகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.