Categories
தேசிய செய்திகள்

“17 முதல் 20 மணி நேரம் வரை போரிட்டோம்”… இந்தோ-திபெத்திய எல்லை படை…!!

கல்வான் பள்ளத்தாக்கில் நடைபெற்ற போரில் 17 முதல் 20 மணிநேரம் கடுமையாகப் போரிட்டோம் என இந்தோ-திபெத்திய எல்லை காவல் படை தெரிவித்துள்ளது.

இந்திய – சீன எல்லையில் உள்ள லடாக்கின் கல்வான் பகுதியில் ஜூன் 15-ம் தேதி இருநாட்டு வீரர்களுக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். சீன தரப்பிலும் 43 பேர் வரை உயிரிழந்திருக்காலம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், சீனா இதனை இல்லை என்று மறுத்துள்ளது.இந்த விவகாரத்தைத் தொடர்ந்து லடாக் எல்லையில் பதற்றம் அதிகரித்து வந்தது. இருநாடுகளும் தங்களது வீரர்களையும், படைகளையும் குவித்து வந்தன. இருதரப்பிலும் பதற்றம் தணியும் வகையில், ராணுவ அதிகாரிகள் மற்றும் தூதரக அதிகாரிகள் இடையேயான பேச்சுவார்த்தை நடைபெற்றது. தொடர் பேச்சுவார்த்தையில் ஒருங்கிணைந்த கருத்து ஏற்பட்டதை அடுத்து, படைகளை விலக்கிக் கொள்ள இருநாடுகளும் ஒப்புதல் தெரிவித்தன.

இதனால் எல்லையில் இப்போது சற்று அமைதியான நிலை காணப்பட்டு வருகிறது. இந்நிலையில், சீன படையை எதிர்த்து நள்ளிரவில் 17 முதல் 20 மணிநேரம் கடுமையாக போரிட்டோம் என இந்தோ-திபெத்திய எல்லை காவல் படை தெரிவித்துள்ளது. இது பற்றி  இந்தோ-திபெத்திய எல்லை காவல் படை வெளியிட்டுள்ள செய்தியில், “நாங்கள் எங்களை தற்காத்துக் கொள்ள திறம்பட செயல்பட்டதுடன், முன்னேறி வந்த சீன ராணுவத்தினரையும் கடுமையாக தாக்கி நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தோம்.

உயர்ந்த தொழில்திறனுடன் போரிட்ட எங்களது படையினர் காயமடைந்த இந்திய ராணுவ வீரர்களை பின்னுக்கு கொண்டு வந்தனர். ஒரு நாள் இரவு முழுவதும் எங்களுடைய படையினர் போர் செய்தபொழுதும், குறைந்த அளவிலேயே எங்கள் தரப்பில் காயமடைந்தனர். கல் வீச்சில் ஈடுபட்ட சீன ராணுவத்தினருக்கு சரியான பதிலடி கொடுத்தோம். அந்த இரவு முழுவதும் தீர்மானத்துடன் சீனப்படையை எதிர்த்து நிலைத்து நின்று 17 முதல் 20 மணிநேரம் கடுமையாக போரிட்டோம்” என கூறியுள்ளது.

Categories

Tech |