மருந்துகளை ஏற்றுமதி செய்யும் இந்தியாவிற்கு பாகிஸ்தான் பயங்கரவாதிகளை ஏற்றுமதி செய்கிறது என இந்திய ராணுவ தளபதி கூறியுள்ளார்.
உலக நாடுகள் பலவும் கொரோனா தொற்றை தடுக்க பல்வேறு முயற்சிகளை எடுத்து வரும் நிலையில் காஷ்மீரில் இருக்கும் எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் சில தினங்களாக பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதலை மேற்கொண்டு வருகிறது. இச்சூழலில் காஷ்மீரில் உள்ள நிலைமை குறித்து ஆய்வு மேற்கொள்ள இந்திய ராணுவத்தின் தளபதி எம்.எம்.நாரவனே இரண்டு தினங்கள் அங்கு சுற்றுப்பயணமாக சென்றார்.
இந்நிலையில் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் இந்திய ராணுவ தளபதி எம்.எம்.நாரவனே கூறியதாவது “இந்தியாவும் உலகின் பிற நாடுகளும் தொற்றுநோயை எதிர்த்துப் போராடி வரும் நிலையில் பாகிஸ்தான் பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்து கொண்டு இருக்கிறது. இந்தியா மருந்துகளை ஏற்றுமதி செய்து உலகுக்கு உதவியாக இருக்கிறது ஆனால் பாகிஸ்தான் மறுபக்கம் இந்தியாவிற்கு பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்துகொண்டிருக்கிறது.
இம்மாதத்தின் தொடக்கத்தில் இந்தியாவினுள் பயங்கரவாதிகளின் ஊடுருவல் முயற்சி தோல்வியடைந்தது. பாகிஸ்தான் ராணுவத்தின் ஆதரவு இல்லாமல் இந்தியாவுக்குள் பயங்கரவாதிகளின் ஊடுருவல் சாத்தியமே இல்லை. ஒட்டுமொத்த உலகமே கொடிய தொற்று நோயான கொரோனாவை எதிர்த்துப் போராடும் பொழுது, நம் அண்டை நாடான பாகிஸ்தான் நமக்கு தொல்லைகளை கொடுப்பது மிகவும் துரதிஷ்டவசமானது” என்று கூறினார்.