நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் இறப்பு விகிதம் 3.3% ஆக உள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களை சந்தித்த அவர், நாட்டில் மீட்பு விகிதம் 29.9% ஆகவும் உயர்ந்துள்ளது எனவும் இவை மிகச் சிறந்த குறிகாட்டிகள் என கூறியுள்ளார். கடந்த 3 நாட்களுக்கான இரட்டிப்பு விகிதம் சுமார் 11 நாட்கள், கடந்த 7 நாட்களில் இது 9.9 நாட்கள் உள்ளது என கூறியுள்ளார். மேலும், பல வளர்ந்த நாடுகளைப் போல நம் நாட்டில் மிக மோசமான நிலைமையை நாங்கள் எதிர்பார்க்கவில்லை.
ஆனால் மோசமான சூழ்நிலைக்கு முழு நாட்டையும் நாம் தயார் செய்துள்ளோம் என கூறியுள்ளார். தொற்றுநோய் ஒரு மோசமான திருப்பத்தை ஏற்படுத்தினால் நாட்டை இன்னும் ஒரு சூழ்நிலைக்கு நிர்வாகம் தயார் செய்துள்ளது என்று அமைச்சர் கூறினார். இந்தியாவில் 60 ஆயிரத்தை நெருங்கியது கொரோனா பாதிப்பு. மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த 24 மணி நேரத்தில் 3,320 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், 95 பேர் நேற்று கொரோனவால் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 59,662 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,981 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 17,847 ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், இன்றும் நாட்டில் அதிகளவில் பாதிப்புகள் ஏற்படும் என அஞ்சப்படுகிறது.