நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற இயக்குனர் வெற்றிமாறன் நாம் அரசியல் தெளிவுடன் இருக்க வேண்டும் என பேசி உள்ளார்.
தமிழ் சினிமா உலகில் பிரபல இயக்குனரான வலம் வரும் வெற்றிமாறன் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்போது அவர் பேசியுள்ளதாவது, திராவிட இயக்கம் சினிமாவை கையில் எடுக்கும் போது இலக்கிய துறையைச் சேர்ந்தவர்கள் கலை கலைக்காகத்தான், கலை மக்களுக்காக இல்லை என்கிறார்கள். அழகியல் பற்றி நிறைய பேசுகிறார்கள். கலையில் அழகியல் முக்கியமானது தான். ஆனால் மக்களிடம் இருந்து விலகி எந்த கலையும் முழுமையடையாது. மக்களுக்காகத்தான் கலை. மக்கள் பிரதிபலிப்பது தான் கலை. இந்த கலையை நாம் சரியாக கையாள வேண்டும்.
இதனை கையாளத் தவறினால் வெகு சீக்கிரம் நிறைய அடையாளங்கள் பறிக்கப்படும். நம்மிடம் இருந்து அடையாளங்களை தொடர்ந்து பறித்துக் கொண்டிருக்கின்றார்கள். வள்ளுவருக்கு காவி உடை உடுப்பது ராஜ ராஜ சோழனை இந்து அரசனாக்குவது இப்படி தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இது சினிமாவிலும் நடக்கும். சினிமாவிலும் நிறைய அடையாளங்களை எடுக்கின்றார்கள். இந்த அடையாளங்களை நாம் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். நம்முடைய விடுதலைக்காக நாம் போராட வேண்டும். இதனால் நான் அரசியல் தெளிவுடன் இருக்க வேண்டும் என பேசி உள்ளார்.