நம்பிக்கையின் அடையாளமாக இருக்கும் ஒரு வாலிபரின் வாழ்கை கதையை இப்போது பார்க்கலாம்.
வீட்டு வாடகை கூட கொடுக்க முடியாமல் வாழ்க்கையில் வறுமையை மட்டுமே பார்த்து வளர்ந்து வந்த வாலிபர் ஒருவர், அவருடைய இடைவிடா முயற்சியின் காரணமாக சொகுசு பங்களா, லம்போர்கினி கார் என்று அத்தனை தடைகளையும் தகர்த்தெறிந்து கோடீஸ்வரர் ஆகியுள்ளார். அமெரிக்காவின் விர்ஜினியாவில் வசிப்பவர் பிராண்டன் காண்டி. இவர் சிறு வயதிலேயே தந்தையை இழந்ததால் தாயின் பாதுகாப்பில் வளர்ந்துள்ளார். இவருடைய குடும்பம் வறுமையின் பிடியில் சிக்கி அதனுடையே வாழ்ந்து வந்துள்ளது. அவருடைய தாயாரின் வருமானத்தை மட்டுமே நம்பி இருந்த ஒரு காலகட்டத்தில் அவருடைய வேலையும் பறி போனதால் வீட்டு வாடகை கொடுக்க முடியாமல் அந்த வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இந்த சூழ்நிலையில் வேறு வழியில்லாமல் இருவரும் சாலையில் வசித்து வந்துள்ளனர். அப்போது அவர்களுடைய வீடு பொது கழிப்பறை. தனது 16வது வயதில் தன்னுடைய தாயுடன் தெருவில் நின்ற பிராண்ட் முதன் முதலில் வீடுகளில் பாத்திரம் தேய்க்கும் வேலைக்கு சென்றுள்ளார். பின்னர் அதன் மூலம் கிடைத்த வருமானத்தை கொண்டு தனது தாய்க்கு சாப்பாடு கொடுத்து வந்துள்ளார். 21 வயதில் சிறிய சிறிய வேலைகளை செய்து வந்துள்ளார். அப்படியாவது கஷ்டப்பட்டு சம்பாதித்து தனது தாய்க்காக ஒரு வீட்டை வாங்கி கொடுக்க வேண்டுமென்று லட்சியம் வைத்திருந்துள்ளார்.
இதையடுத்து இன்ஸ்டாகிராம் மார்க்கெட்டிங் ஏஜென்சி மற்றும் வேறு சில சொந்த தொழில் மூலமாக கடந்த இரண்டு வருடங்களில் கோடீஸ்வரராக மாறியுள்ளார். தற்போது இன்ஸ்டாகிராம் மூலமாக மட்டுமே மாதத்திற்கு 18 லட்சத்துக்கு சம்பாதித்து வருகிறார். தன்னுடைய தாயாருக்கு சொந்தமாக வீடு, சொகுசு கார் வாங்கி கொடுத்த இவர் தனது சொகுசு பங்களாவில் வசித்து வருகிறார். விதவிதமான ஆடைகளுடன், வழக்கமாக வருடத்திற்கு ஒரு சுற்றுலாவும் சென்று வருகிறார்.
இதுகுறித்து அவர் கூறுகையில்,,”எங்களுக்கு வீடு இல்லாத நேரத்தில் நண்பர்களின் வீட்டில் தங்க இடம் கிடைக்குமா? என்று அலைந்து உள்ளேன். ஆனால் சில நேரங்களில் பொது கழிப்பறையில் கூட தங்கியிருக்கிறேன். நான் ஒருபோதும் நம்பிக்கை மட்டும் இழக்கவில்லை. முதலில் நாம் நம்மை நாமே நம்ப வேண்டும். எந்த சூழ்நிலையில் இருந்தாலும் அதிலிருந்து மீண்டு வருவோம் என்ற நம்பிக்கை இருந்தால் நிச்சயம் வாழ்க்கையில் ஜெயிக்கலாம்” என்று வெற்றியின் தாரக மந்திரத்தை தெரிவித்துள்ளார்.