கொரோனா தொற்று எப்படி பரவியது என விசாரணை நடத்த அமெரிக்க நிபுணர்களை சீனாவுக்கு அனுப்ப விரும்புகிறேன் என டிரம்ப் தெரிவித்துள்ளார்
சீனாவில் தொடங்கிய கொரோனா தொற்று பல நாடுகளுக்கும் பரவி ஏராளமான உயிர்களை எடுத்து வருவதில் அதிக இழப்பை சந்தித்த நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் இருந்து வருகிறது. இதுவரை அமெரிக்காவில் 7 லட்சத்திற்கும் அதிகமானோர் வைரஸால் பாதிக்கப்பட்டு 41 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பரவத்தொடங்கியது முதலே சீனா மீது இருந்த சந்தேகத்தை அமெரிக்க அரசு முன்வைத்து வந்தது.
அதுமட்டுமின்றி உலக சுகாதார அமைப்பையும் டிரம்ப் கடுமையாக சாடியுள்ளார்.அதன் தொடர்ச்சியாக உலக சுகாதார அமைப்புக்கு கொடுத்துவந்த நிதியையும் நிறுத்த உத்தரவு பிறப்பித்தார். இதனிடையே கொரோனா வைரஸ் இயற்கையாக தோன்றவில்லை அது வூஹானில் இருக்கும் ஆய்வுக் கூடத்திலிருந்து வெளிவந்ததாக செய்திகள் வெளியானதால் டிரம்ப் மேலும் கடுமையாக எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில் வெள்ளை மாளிகையில் நேற்று முன்தினம் பேட்டி அளித்த டிரம்ப் கூறியதாவது “கொரோனா தொற்றை சீனா தெரிந்தே பரப்பி இருந்தால் கடுமையான பின்விளைவுகளை சந்திக்கக்கூடும் என எச்சரிக்கை விடுத்தார். அதோடு தொற்று வூஹான் நகரிலிருந்து பரவியதா என அறிய அமெரிக்க புலனாய்வுத் துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்” என பகிரங்கமாக கூறியுள்ளார்.
இந்நிலையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் “சீனாவுடனான வர்த்தக ஒப்பந்தம் மற்ற பல விஷயங்களில் நான் மிகவும் மகிழ்ச்சியாகவே இருந்தேன். ஆனால் கொரோனா தோற்று பரவியதில் சீனா மீது எனக்கு எந்த ஒரு மகிழ்ச்சியும் இல்லை.கொரோனா வைரஸ் சீனாவில் எந்த இடத்திலிருந்து பரவியது என்பதை அறிய அமெரிக்க நிபுணர்களை சீனாவிற்கு அனுப்ப விரும்புகிறேன். அதற்கு அவர்கள் என்ன பதில் அளிக்கப் போகிறார்கள் என்பது மிகவும் முக்கியம்.
பிளக் தொற்று போன்று கொரோனா வைரஸும் வெகுவாக பரவி வருகிறது. சீனாவுக்கு அமெரிக்க நிபுணர்கள் சென்று விசாரணை நடத்துவது தொடர்பாக வெகு நாட்களுக்கு முன்னரே அவர்களிடம் பேசியிருந்தோம் அமெரிக்க நிபுணர்கள் சீனாவுக்கு செல்ல வேண்டும் அங்கு என்ன நடக்கிறது என்பதை அறிந்துகொள்ள விரும்புகிறோம். ஆனால் அவர்கள் எங்களை இதுவரை அழைக்கவில்லை” என்று கூறினார்