Categories
தேசிய செய்திகள்

‘ஜனநாயகத்தைக் கண்டு அவமானப்படுகிறேன்’ – மம்தா ஆவேசம்!

ஜனநாயகத்தைக் கண்டு அவமானப்படுகிறேன் என ஜே.என்.யு. பல்கலைக்கழக தாக்குதல் சம்பவம் குறித்து மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கருத்து கூறியுள்ளார்.

இரண்டு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக (ஜே.என்.யூ.) மாணவர்கள் நேற்று மாலை அப்பல்கலைக்கழக வளாகத்துக்குள் அமைதிப் பேரணியில் ஈடுபட்டனர். அப்போது, திடீரென அங்கு வந்த முகமூடி கும்பல் ஒன்று இரும்புக் கம்பி, உருட்டுக்கட்டையால் அங்கிருந்தவர்களைச் சரமாரியாகத் தாக்கியது. அதோடு மட்டுமில்லாமல் மாணவர்கள் விடுதிகள், வரவேற்பறைகள், வாகனங்கள் ஆகியவற்றையும் அந்தக் கும்பல் அடித்து உடைத்தது.

இதில், ஜே.என்.யூ. மாணவ சங்கத் தலைவி அய்ஷி கோஷ், மாணவர்கள், ஆசிரியர்கள் என 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள இந்த வன்முறைச் சம்பவத்தை எதிர்த்து நாடெங்கிலும் உள்ள மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த வன்முறைச் சம்பவத்தை அரங்கேற்றியது ஆர்.எஸ்.எஸ்.இன் மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷாத்தைச் (ABVP) சேர்ந்த உறுப்பினர்கள் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

இச்சம்பவத்தைக் கண்டித்த மேற்குவங்க முதலமைச்சர் மம்தா, “ஜே.என்.யூ. மாணவர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் மீது கட்டவிழ்க்கப்பட்ட மிருகத்தனமான தாக்குதலைக் கண்டிக்கிறோம். கொடூரமான தாக்குதலை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. நம் ஜனநாயகத்தைக் கண்டு அவமானப்படுகிறேன்” என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், “நாஜிக்களைப்போல் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தாக்குதல் மேற்கொண்டவர்கள் அபாயகரமான சூழலை நாடு முழுவதும் உருவாக்க முயற்சிக்கின்றனர். வெறுப்பின் பெயரில் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டு பல்கலைக்கழகங்களை ரத்தக்களரியாக்கும் சங் பரிவார் அமைப்புகள் அதனை நிறுத்திக்கொள்ள வேண்டும்.

படுகாயமடைந்த மாணவர் அமைப்பின் தலைவர் சென்ற ஆம்புலன்ஸை அகில பாரதிய வித்யார்த்தி பரிஷாத்தைச் சேர்ந்த மாணவர்கள் தடுக்க முயற்சி செய்த சம்பவம் கலவரத்தை உருவாக்குவதற்கு, அவர்கள் எந்தளவுக்குச் செல்வார்கள் என்பதைக் காட்டுகிறது” என்றார்.

Categories

Tech |