Categories
அரசியல் தேசிய செய்திகள்

CAA , NRC , NPRக்கு எதிராக வீடு வீடாக பரப்புரை செய்வோம் – சீதாராம் யெச்சூரி

 குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA), தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC), தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பு (NPR) ஆகியவற்றிற்கு இருக்கும் தொடர்புகள் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வீடு வீடாக விரைவில் பரப்புரை மேற்கொள்ளப்படும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி கூறினார்.

கேரள மாநிலத் தலைநகர் திருவனந்தபுரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பாக தீவிர பரப்புரையை முன்னெடுக்கவுள்ளோம்.

கேரளாவின் நிதித் தேவைகள் குறித்து மத்திய அரசு பாரபட்சமான, எதிர்மறையான அணுகுமுறையை பின்பற்றுகிறது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் நிலையை மத்தியக் குழு மீட்டெடுக்க வேண்டும். குடியுரிமை திருத்தச் சட்டத்தை அனுமதிக்க மாட்டேன் என்று கூறிய அனைத்து முதலமைச்சர்களிடமும் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பை நிறுத்துமாறு கோரிக்கைவைத்துள்ளோம்.

குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்தோ, தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்து மக்கள் எந்தத் தகவலையும் அளிக்க வேண்டாம். தேசிய குடிமக்கள் பதிவேடு, குடியுரிமை திருத்தச் சட்டம், மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆகியவற்றிற்கு உள்ள தொடர்பு குறித்து மக்கள் அறிந்துகொள்ள விரைவில் வீடு வீடாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பரப்புரை மேற்கொள்ளப்படும்” என்றார்.

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக கேரள அரசு, டெல்லி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக மாநில ஆளுநர் ஆரீப் முகமது கானுக்கும், முதலமைச்சர் பினராயி விஜயனுக்கும் இடையே வார்த்தை மோதல் உருவாகியுள்ளது கவனிக்கத்தக்கது.

Categories

Tech |