குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்தும் விவகாரத்தில் பாஜக ஒரு அடிகூட பின்வாங்காது என அக்கட்சியின் தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அமித்ஷா குடியுரிமை சட்ட திருத்தம் பற்றி மக்களிடையே பேசினார். அதில், குடியுரிமை திருத்த சட்டம் என்பது யாருடைய குடியுரிமையும் பறிக்கும் சட்டம் கிடையாது என்றும், பிறருக்கு குடியுரிமை அளிக்க வழிவகை செய்யும் சட்டம் எனவும் கூறினார்.
அதேபோன்று குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்தும் விவகாரத்தில் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஓரணியில் திரண்டு வந்தாலும் பாஜக ஒரு அங்குலம் கூட பின்வாங்காது என்று அமித்ஷா தெரிவித்தார். வாக்கு வங்கி அரசியலுக்காக காங்கிரஸ் கட்சியினர் சிறந்த தலைவரான வீர சவார்க்கர்க்கு எதிராக பேசுவதாகவும் இதற்காக அந்த கட்சியினர் வெட்கப்பட வேண்டும் என்றும் கூறினார்.