சூளைமேடு அப்துல்லா தெருவைச் சேர்ந்தவர் ராகேஷ். இவர் சென்னை சாஸ்திரி பவன் அருகே உள்ள தகவல் தொழில்நுட்ப( நிறுவனத்தில் மேலாளராகப் பணியாற்றிவருகிறார். இவர் வேலைமுடிந்தவுடன் எப்போதும் மிதிவண்டியில் வீடு திரும்புவது வழக்கம்.
அவ்வாறு இன்று அதிகாலை 4 மணிக்கு வேலை முடிந்து வீட்டுக்குச் செல்லும்போது, லயோலா கல்லூரியின் சுரங்கப்பாதை அருகே மிதிவண்டியின் செயின் கழன்றுள்ளது. அதனை மாட்டிக்கொண்டு இருக்கும்போது மூன்று இருசக்கர வாகனங்களில் வந்த ஆறு பேர், ராகேஷிடம் செல்போனை பேசிவிட்டுத் தருவதாகக் கேட்டுள்ளனர்.
ஆனால், செல்போனை ராகேஷ் தர மறுத்ததால், கையில் கொண்டுவந்த ஆயுதங்களைக் கொண்டு அக்கும்பல் சரமாரியாகத் தாக்கிவிட்டுச் சென்றுள்ளது.
பின்னர், அருகிலிருந்தவர்கள் ராகேஷை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். அங்கு அவருக்கு தலையில் எட்டு தையல் போடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் ராகேஷ் புகார் அளித்ததன் அடிப்படையில் காவல் துறையினர் சிசிடிவி காட்சிகளை வைத்து அக்கும்பலைத் தேடிவருகின்றனர்.