தமிழகத்தின் வடமாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு அனல்காற்று வீசும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
ஆம்பன் புயல் கரையை கடந்துவிட்ட போதிலும் தமிழகத்தில் அனல் கற்று வீசும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மே 4ம் தேதி முதல் அக்னி நட்சத்திரம் தொடங்கியது. மேலும் வரும் 28ம் தேதி முதல் அக்னி நட்சத்திரம் முடிவுக்கு வருகிறது. ஆனால் 2020 ஆண்டில் கடந்த ஒரு வாரமாகத்தான் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது.
நேற்று மட்டும், தமிழகத்திலேயே அதிகபட்சமாக சென்னை மாநகரில் இன்று 108 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் சுட்டெரித்தது. திருத்தணியில் 108 டிகிரி ஃபாரன்ஹீட் வெளியில் கொளுத்தியதால் மக்கள் மிகவும் அவதிக்குள்ளாக்கப்பட்டனர். இதையடுத்து, வேலூரில் 107.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் தாக்கியதால் மக்கள் மிகவும் சிரமப்பட்டனர்.
மேலும், கடலூரில் 107, ஈரோடு மற்றும் பரங்கிப்பேட்டையில் 105, நாகையில் 104, சேலத்தில் நேற்று 102 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. அதேபோல இன்றும் வெயிலின் தாக்கம் அதிகரித்தபடி தான் உள்ளது. இந்த நிலையில், இன்னும் 3 நாட்களுக்கு அனல் காற்று வீசும் என அறிவித்துள்ளது.
பொதுவாக அக்னி நட்சத்திரம் நடைபெறும் போது வெயில் கொளுத்துவது வழக்கம். ஆனால் இந்த முறை ஆம்பன் புயல் காரணமாகவும் வெப்பம் அதிகரித்துள்ளது. ஆம்பன் புயல் ஒடிசாவை நோக்கி சென்றாலும், அது காற்றின் ஈரப்பதத்தை உறிஞ்சி விட்டது. இதன் காரணமாக தான் தமிழகம் உள்ளிட்ட நாட்டின் பிற மாநிலங்களில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது.