போராட்டத்தின் போது பேருந்தின் கண்ணாடியை உடைத்த மர்ம நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள பகண்டை கூட்ரோடு மும்முனை சந்திப்பில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதை கண்டித்து பா.ம.க சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இதில் செயலாளர் அமல்ராஜ் தலைமையில், மாநிலத் துணைத் தலைவரான மணிகண்டன் உள்பட 50-க்கும் அதிகமான பா.ம.க கட்சியினர் திடீரென அவ்வழியாக செல்லும் வாகனங்களை சிறைபிடித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அரசு பேருந்தின் முன்புறக் கண்ணாடியை மர்மநபர் ஒருவர் கல்வீசி உடைத்துள்ளார்.
இதுபற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பா.ம.க-வினரை சமாதானம் செய்து அங்கிருந்து கலைந்து போக செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து பேருந்தின் கண்ணாடி கல்வீசி உடைக்கப்பட்டதில் இரண்டு பயணிகள் உள்பட 3 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. மேலும் இது குறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பேருந்தின் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்திய மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.