திருமணத்தில் மணமகன் குடித்துவிட்டு வந்து மணமகளை நடனமாடும் படி அழைத்து கலாட்டா செய்ததால் மணமகள் திருமணத்தை நிறுத்தியுள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம், பிரயாகராஜில் உள்ள பிரதாப்கர் நகரின் ஒரு கிராமத்தில் விவசாயி தனது மகளுக்கு திருமணம் ஏற்பாடு செய்திருந்தார். மணமகன் ரவீந்திரன் தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் திருமணத்திற்கு வந்தனர். திருமணத்திற்கு முன்பாக மணமகன் மணமகளை நடனம் ஆடும்படி கூறி வற்புறுத்தியுள்ளார். அதற்கு மணமகள் மறுத்துவிட்டார். இதனால் கோபம் அடைந்த மணமகன் தன் நண்பர்களுடன் சேர்ந்து குடித்துவிட்டு மணமகள் நடனம் ஆடவில்லை என்று கலாட்டாவில் ஈடுபட்டுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த மணப்பெண் திருமணத்தை நிறுத்தி விட்டார். பின்னர் மணமகள் வீட்டார் கொடுத்த வரதட்சணை மற்றும் பரிசுப் பொருட்கள் அனைத்தையும் திரும்பத் தருமாறு கேட்டுள்ளனர் .அதற்கு அவர்கள் சம்மதம் தெரிவிக்கவும் பொருட்களை வாங்கிக்கொண்டு மணமகள் வீட்டார் அங்கிருந்து சென்றனர். திருமணத்தில் மணமகன் குடித்து விட்டு ரகளையில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.