நாமக்கல் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற பருத்தி ஏலத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் கலந்து கொண்டு பருத்தியை கொள்முதல் செய்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டத்தில் வாரந்தோறும் செவ்வாய் கிழமை அன்று வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில் பருத்தி ஏலம் நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்று நடைபெற்ற பருத்தி ஏலத்தில் ராசிபுரம், எருமப்பட்டி, வேலகவுண்டம்பட்டி, நாமகிரிப்பேட்டை, புதுசத்திரம் மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களிலிருந்து விவசாயிகள் வந்து பருத்தி மூட்டைகளை விற்பனை செய்துள்ளனர்.
இந்நிலையில் டி.சி.எச். ரக பருத்தி குவிண்டால் ஓன்று 6,450 முதல் 8,402 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து ஆர்.சி.எச் ரக பருத்தி 6,139 ரூபாயிலிருந்து 7,509 ரூபாயாகவும், கொட்டு ரக பருத்தி 3,300 ரூபாய் முதல் 5,699 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டுள்ளது. மேலும் மொத்தமாக நேற்று 80 லட்சம் வரை பருத்தி விற்பனையாகியுள்ளது. இந்த ஏலத்தில் கோவை, திருப்பூர், திண்டுக்கல், சேலம், அவிநாசி, தேனி உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து வியாபாரிகள் வந்து பங்கேற்றுள்ளது.