Categories
அரசியல்

நாங்க தான் டாப் ….!! ”உச்சம் தொட்ட தமிழகம்” ஹீரோவான எடப்பாடி…!!

கொரோனா பாதித்த அதிகமானோரை குணப்படுத்திய மாநிலங்களின் வரிசையில் தமிழகம் முதலிடம் பெற்றுள்ளது.

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும், உயிரிழப்புகளும் உயர்ந்து கொண்டே இருப்பதால் மக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. இருந்தாலும் பாதிக்கப்பட்டு முறையான சிகிச்சை பெற்ற 3 ஆயிரத்திற்கும் அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளது மக்களுக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தை முன்னின்று நடத்தி வருகிறது.

முன்மாதிரியான தமிழகம் :

குறிப்பாக மே மாதம் 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, மாநிலம் முழுவதும் முழுமையாக கடைபிடிக்கப்பட்டு வருகின்றது. மத்திய அரசு மற்றும் மத்திய சுகாதாரத்துறை ஆலோசனையை பெற்று மாநில அரசுகளும்  கொரோனாவுக்கு எதிராக சிறப்பான சிகிச்சை அளித்து வருகின்றன. தமிழகமும் கொரோனாவுக்கு எதிராக முன்மாதிரியான சிகிச்சை வழங்கி மக்களுக்கு கொரோனா மீது இருக்கும் பயத்தை போக்கி வருகின்றது.

இந்தியாவிலே தமிழகம் முதலிடம் : 

கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிராவில் 4,666 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு முதல் மாநிலமாக இருக்கும் அதே நேரத்தில் 1596 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு தமிழகம் 5ஆம் இடத்தில் இருக்கின்றது. தமிழக சுகாதாரத்துறை கொடுத்து வந்த முன்மாதிரியான சிகிச்சையால் இன்று ஒரே நாளில் 178 பேர் குணமடைந்து கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். இதன் மூலம் 572  பேரை குணப்படுத்திய மகாராஷ்டிராவை பின்னுக்கு தள்ளி 635 பேரை குணப்படுத்திய தமிழகம் இந்தியாவிலேயே முதலிடத்தை பெற்றுள்ளது.

இரவு பகல் பணி : 

குறிப்பாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கொரோனா வைரஸ் பரவத் தொடங்கிய காலம் முதல் பல்வேறு ஆலோசனை கூட்டங்களை நடத்தினார். பல கட்டமாக நடைபெற்ற இந்த ஆலோசனையில் கொரோனா குறித்து ஒட்டுமொத்தமாக அலசி ஆராயப்பட்டது. தமிழக முதல்வரின் ஆணைக்கிணங்க தமிழக சுகாதாரத்துறையும் இரவு பகலாக பணி செய்தது. கொரோனா தடுப்பு சிகிச்சையை முடுக்கி விட்டது. இதனால் தான் இன்று கொரோனாவால் அதிக பாதிப்பை சந்தித்த மாநிலங்களில் ஐந்தாவது இடத்தில் இருக்கும் தமிழகம் அதிகமானோரை குணப்படுத்திய மாநிலங்கள் வரிசையில் முதல் இடத்திற்கு வந்துள்ளது.

மோடியின் பாராட்டு : 

கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரிக்க தொடங்கிய நாள் முதலே தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கொரோனா இருக்கிறதா? இல்லையா என்பது குறித்த ஆய்வு மையம் அமைக்க மத்திய அரசிடம் பல முறை அனுமதி கேட்டு இந்தியாவிலே அதிக ஆய்வு மையத்தை தமிழகத்துக்கு கொண்டு வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு கூட பிரதமர் மோடி தமிழக முதல்வரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தமிழகத்தில் மேற்கொண்டு வரும் சுகாதார நடவடிக்கை, தடுப்பு நடவடிக்கைகளை கேட்டறிந்து, தமிழக அரசின் சிறப்பான நடவடிக்கைக்கு பாராட்டு தெரிவித்தார். மேலும் தமிழக அரசின் சிறப்பான நடவடிக்கையை பாராட்டியதோடு, தமிழக முதல்வர் கேட்ட அதிக ரேபிட் டெஸ்ட் கிட்டுக்களை தருவதாக மோடி தெரிவித்தார்.

முதல்வர்களின் ஹீரோ : 

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் செயல்பாடு பலரையும் கவர்ந்துள்ளது. கொரோனா பரவல் அதிகரித்ததும் தமிழக முதல்வர் மருத்துவமனைகளை ஆய்வு செய்து, ஆய்வுக் கூட்டங்களை நடத்தி தேவையான மருத்துவ உபகரணங்களுக்கு ஆர்டர் செய்து அனைத்து மாநிலங்களுக்கும் முன்னணி மாநிலமாக தமிழகத்தை எடுத்துச் சென்றார். இப்படியான ஆக்கபூர்வமான நடவடிக்கையால் இந்திய அளவில் தமிழக மருத்துவத்துறையில் உச்சம் தொட்டுள்ளது. இதனால் இந்திய முதல்வர்களின் வரிசையிலேயே ஒரு கதாநாயகனாக நம்முடைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஜொலிக்கிறார்.

Categories

Tech |