ஆம்பன் புயலால் பாதித்த பகுதிகளை ஆய்வு செய்ய பிரதமர் மோடி மேற்கு வங்கம் சென்றுள்ளார்.
வங்கி கடலில் உருவாகி அதி தீவிரமடைந்த ஆம்பன் புயல் கடந்த 20ம் தேதி மேற்கு வங்கம் மற்றும் வங்க தேசத்தின் இடையே திஹா மற்றும் சுந்தர்பன் ஹத்தியா தீவுகள் இடையே நகர்ந்து சென்றது. பிற்பகல் 3 மணிக்கு திஹா – சுந்தர்பன் பகுதிக்கு இடையே கரையைக் கடக்க தொடங்கிய புயல் சுமார் 4 மணி நேரத்திற்கு மேலாக நகர்ந்து சுமார் 7 மணியளவில் கரையை கடந்தது. இந்த புயலால் மேற்கு வங்கம் முழுவதும் உருக்குலைந்து காணப்படுகிறது. மேலும் ஒடிசாவில் கனமழையால் கடுமையாக பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.
ஆம்பன் புயலால் மேற்குவங்கத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 80ஆக அதிகரித்துள்ளது. இவர்களுக்கு தலா ரூ. 2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. மேலும் பிரதமர் நரேந்திர மோடி மேற்கு வங்க மாநிலத்துக்கு வந்து தற்போது உள்ள சேதங்களை நேரில் பார்வையிட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று கூறினார். இந்த சூழலில் ஆம்பன் புயலால் பாதித்த பகுதிகளை ஆய்வு செய்ய பிரதமர் மோடி மேற்கு வங்கம் சென்றுள்ளார்.
கொல்கத்தா விமான நிலையத்தில் தரையிறங்கிய பிரதமர் மோடியை அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி வரவேற்றார். புயல் பாதித்த பகுதிகளை இன்று தனி ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் மோடி ஆய்வு செய்ய உள்ளார். அதன் பின்னர் நிவாரண உதவிகள் குறித்து முதல்வர் மம்தாவிடம் ஆலோசனை நடத்த உள்ளார். முன்னதாக சவாலான நேரத்தில் ஒட்டுமொத்த தேசமும் மேற்கு வங்கத்துடன் ஒற்றுமையுடன் நிற்கிறது. நாட்டு மக்கள் அனைவரும் மேற்கு வங்க மக்களின் நல வாழ்விற்காக பிராத்திப்போம் என பிரதமர் மோடி கூறியிருந்தார்.