திருப்பூரில் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர் பல்லடம் ரோட்டில் சந்தைப்பேட்டை அருகில் உள்ள பஸ் நிலையப் பகுதியில் இன்று சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு தலைக்கவசம் இல்லாமல் வந்தவர்களையும், வாகன ஆவணங்கள் இல்லாமல் வந்தவர்களையும் பிடித்து ஓரமாக நிறுத்தியதாக கூறப்படுகிறது. அப்போது வாகன ஓட்டி ஒருவர் ராமசாமி மீது இடிக்க வந்ததாகவும்,
அதை காவல்துறை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என்றும் கூறிய ட்ராபிக் ராமசாமி திடீரென நடுரோட்டில் படுத்து சாலை மறியலில் ஈடுபட்டார். இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சாலை மறியலில் ஈடுப்பட்ட டிராபிக் ராமசாமியுடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பொது மக்களின் கடும் எதிர்ப்பால் டிராபிக் ராமசாமி தனது போராட்டத்தை கைவிட்டார்.