லஸ்ஸோ
மக்களை தன்வசம் கவர்ந்துவைத்துள்ள செயலிகளில் ஒன்று டிக்டாக். ஆதரவையும், வெறுப்பையும் சம்பாதித்துள்ள டிக்டாக் செயலி அதுபோன்ற பல்வேறு வகை செயலிகளின் அரசனாக வலம்வருகிறது. இந்தியாவில் தடைசெய்யப்பட்டு, அதிலிருந்து மீண்டு புத்துயிர் பெற்றுள்ள இச்செயலிக்கு மாற்றாக ஃபேஸ்புக் நிறுவனத்தின் லஸ்ஸோ செயலியை களமிறக்கவுள்ளது இந்நிறுவனம்.
ஃபேஸ்புக் நிறுவனம் டிக்டாக் செயலிக்குப் போட்டியாக லஸ்ஸோ என்ற செயலியை கடந்த ஆண்டு அறிமுகம் செய்தது. குறிப்பாக அமெரிக்காவில் மட்டுமே அறிமுகம்செய்யப்பட்ட, இந்த லஸ்ஸோ செயலி இந்த ஆண்டு மே மாதம்வாக்கில் இந்தியாவில் அறிமுகம் செய்யவிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
லஸ்ஸோ-வாட்ஸ்அப்
லஸ்ஸோ செயலியை ஃபேஸ்புக் நிறுவனத்தின் மற்றொரு தகவல் பகிர்வு செயலியான வாட்ஸ்அப் உடன் ஒருங்கிணைக்கும் பணிகளில் இந்நிறுவனம் ஈடுபட்டுவருவதாக ஏற்கனவே தகவல்கள் வெளிவந்துள்ளன. பின்பு இந்தச் செயலி இந்தியாவில் அறிமுகம்செய்யப்பட்டால் டிக்டாக் செயலிக்கு கடும் போட்டியை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது.
ஃபேஸ்புக் நிறுவனம் 2019ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் சிங்கப்பூரில் உள்ள அதன் நிபுணர் குழு ஒன்று இந்திய வெளியீட்டிற்கு லஸ்ஸோ செயலியை தயார்படுத்தும் வேலைகளில் ஈடுபட்டுள்ளதாகத் தகவல் கசிந்துள்ளது. மேலும், போட்டி செயலியான டிக்டாக் வளர்ச்சியின் காரணிகளை அறிந்துகொள்ள இந்நிறுவனம் மூன்றாம் தரப்பு நிறுவனங்களின் உதவியுடன் ஆய்வில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால் டிக்டாக் செயலிக்குப் போட்டியை ஏற்படுத்தும்வகையில், லஸ்ஸோ சேவையில் இணைந்துகொள்ள படைப்பாளிகள், நட்சத்திரங்கள் ஆகியோருடன் பேச்சுவாரத்தையில் ஈடுபட லஸ்ஸோ சார்பில் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தகவல் வெளிவந்துள்ளது.
லஸ்ஸோ பதிவிறக்கம்
லஸ்ஸோ செயலி அமெரிக்காவில் கடந்தாண்டு அறிமுகம் செய்யப்பட்டபோது கூகுள் பிளே ஸ்டோர் மூலம் பல லட்சம் பயனர்கள் பதிவிறக்கம் செய்துள்ளனர். அதேசமயம் லஸ்ஸோ செயலியை இந்திய தவிர இந்தோனேசியா போன்ற தொழில்நுட்ப அறிவியல் வளர்ந்துவரும் சந்தைகளிலும் வெளியிட ஃபேஸ்புக் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.