Categories
தேசிய செய்திகள்

மே 17ம் தேதி வரை பின்பற்ற வேண்டிய மத்திய அரசின் முக்கிய விதிமுறைகள் என்னென்ன? – முழு விவரம்!

நாடு முழுவதும் மே 17ம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. இந்தியாவில் கொரோனவை பரவலை கட்டுப்படுத்த மத்திய அரசு நாடு முழுவதும் மே 3ம் தேதி வரை முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. நாளை மறுநாளோடு ஊரடங்கு நிறைவடைய இருந்த நிலையில் நாடு முழுவதும் 25 ஆயிரம் பேர் கொரோனா சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று குறிப்பிட்டுள்ள மத்திய அரசு மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கை நீடித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

நாடு முழுவதும் இதுவரை 35,363 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 1,152 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மே 17ம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும் சிவப்பு, பச்சை, ஆரஞ்சு என பிரிக்கப்பட்டு அதற்கேற்ப நெறிமுறைகள் அமுல்படுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது. ஆரஞ்சு மற்றும் பச்சை மண்டலங்களுக்கு சில தளர்வுகள் அளிக்கப்படும். சிவப்பு மண்டல பகுதிகளில் கடுமையான கட்டுப்பாடுகள் தொடரும் என அறிவித்துள்ளது.

சிவப்பு மண்டலங்களில் உள்ள கட்டுப்பாடுகள் :

  • இரவு 7 மணி முதல் காலை 6 மணிவரை மக்கள் வெளியே வரக்கூடாது.
  • முதியவர்கள், குழந்தைகள், கர்ப்பிணிகள் வீட்டை விட்டு கண்டிப்பாக வெளிவரக்கூடாது.
  • சிவப்பு மண்டலங்களில் தனியார் அலுவலகங்கள் 33% பணியாளர்களுடன் மட்டும் செயல்பட வேண்டும். ஏணைய ஊழியர்கள் வீட்டில் இருந்தவாறே பணி என்ற வகையில் செயல்பட வேண்டும்
  • சிவப்பு மண்டலங்களில் 2 சக்கர வாகனங்களில் ஒருவர் மட்டும் பயணிக்கலாம்.
  • நகர பகுதிகளில் சில கட்டுப்பாடுகளுடன் ஆலைகள் இயங்க அனுமதி அளிக்கப்படுகிறது.
  • சுயதொழில் செய்வோரின் சேவைகளுக்கு அனுமதி.
  • மேலும் சிவப்பு மண்டலங்களில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் செயல்படுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஆரஞ்சு மண்டலங்களில் உள்ள கட்டுப்பாடுகள் :

  • கொரோனா பாதிப்பு சற்று குறைவாக உள்ள ஆரஞ்சு மண்டலங்களில் ஒரு பயணியுடன் வாடகை காரை இயக்கலாம்.
  • மாவட்டங்களுக்கு இடையே அனுமதி பெற்று மக்கள் வாகனங்களில் செல்லலாம்.
  • 4 சக்கர வாகனங்களில் ஓட்டுநருடன் 3 பேரும், இரு சக்கர வாகனங்களில் ஓட்டுநருடன் 2 பேரும் செல்லலாம்.

பச்சை மண்டலங்களில் உள்ள கட்டுப்பாடுகள் :

  • கொரோனா தொற்று 21 நாட்களுக்கு இல்லாத மாவட்டம் பச்சை மண்டலமாக மாற்றப்படும்.
  • பசுமை மண்டலத்தில் பேருந்துகள் 50% பயணிகளுடன் மட்டுமே இயங்க அனுமதிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
  • பச்சை மண்டலங்களில் மதுக்கடைகள், பீடா கடைகளை திறக்க அனுமதி

நாடு முழுவதும் விதிக்கப்பட்டுள்ள பொதுவான கட்டுப்பாடுகள் :

  • நாடு முழுவதும் சரக்கு போக்குவரத்துக்கு அனுமதி அளித்து அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சரக்கு போக்குவரத்தை மாநிலங்கள் தடுக்கக்கூடாது என குறிப்பிட்டுள்ளது.
  • நாடு முழுவதும் 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டப் பணிகளை நடத்துவதற்கு அனுமதி.
  • கிராமப்பகுதிகளில் அனைத்து வகையான சிறு கடைகளையும் திறப்பதற்கு அனுமதி.
  • தங்கியிருந்து வேலை செய்யும் தொழிலாளர்களுடன் நகர்புறங்களில் கட்டுமான பணிகளை மேற்கொள்ளலாம்.

எதெற்கெல்லாம் தடை?

  • மே 17ம் தேதி வரை சாலை, ரயில், விமான போக்குவரத்து சேவைகள் இல்லை.
  • பள்ளி, கல்லூரிகள், வழிபாட்டுத்தலங்கள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும்.
  • அத்தியாவசியம் அல்லாத சேவைகளுக்கு அனுமதி கிடையாது
  • பொது முடக்க காலத்தில் அத்தியாவசிய தேவையின்றி இரவு 7 மணி முதல் காலை 7 மணி வரை வெளியே யாரும் சுற்ற அனுமதிக்க கூடாது.
  • பேருந்து, அழகுகலை நிலையம், சலூன்கள் மற்றும் வணிக வளாகங்கள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
  • ஓட்டல்கள், தியேட்டர்கள், உடல் பயிற்சி கூடங்களுக்கு அனுமதி இல்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது.
  • மத வழிபாடுகள், அரசியல் கூட்டங்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |