நபர் ஒருவர் கம்பெனியிலிருந்து பணியிடை நீக்கப்பட்டதால் கோபத்தில் அங்கிருந்த கார்களை இடித்து நொறுக்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கார் தயாரிப்பில் உலகளவில் முன்னணி நிறுவனமாக, ஜெர்மனியை சேர்ந்த மெர்சீடஸ் பென்ஸ் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தின், ஸ்பெயின் நாட்டில் உள்ள கிளையான பாஸ்க் கேப்பிட்டல் விட்டோரியா கேஸ்டெய்ஸ் தொழிற்பேட்டையில் இயங்கி வருகிறது. இந்நிலையில், சம்பவத்தன்று தொழிற்பேட்டைக்கு வந்த முன்னாள் ஊழியர் ஒருவர், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, உயர் ரக வகுப்பைச் சேர்ந்த 50 கார்களை ஜே.சி.பி. இயந்திரத்தால் இடித்து நொறுக்கி தள்ளியுள்ளார்.
சேதமடைந்த இந்த கார்களின் மதிப்பு 60 மில்லியன் டாலர்(இந்திய மதிப்பில் 44 கோடி) என்று கூறப்படுகின்றது. இதற்கு காரணம் கடந்த சில வருடங்களுக்கு முன்பு பென்ஸ் நிறுவனத்தில் வேலை பார்த்த இவர், பணிநீக்கம் செய்யப்பட்டதால், பழிவாங்குவதற்காக 3 வருடங்கள் காத்திருந்து, இவ்வாறு நடந்து கொண்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும், அந்த ஜேசிபி இயந்திரத்தையும், அங்கிருந்து 21 கிலோ மீட்டர் தொலைவில் இருந்து திருடி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள், வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு அவரை எச்சரித்த போதும், எதையும் பொருட்படுத்தாமல் கார்களை அவர் இடித்து நொறுக்கியுள்ளார். இதில் ஊழியர்களுக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை என்று கூறப்படுகின்றது. இந்நிலையில் 3 வருடம் காத்திருந்து பழிவாங்கிய இந்த கோவக்கார நபர் செய்த சம்பவம், சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.