பிக் பாஷ் டி20 தொடரின் இறுதி போட்டி ஒருவேளை மழையால் ரத்தாகும் பட்சத்தில், இப்போட்டி சிட்னி சிக்சர்ஸ் அணியின் சொந்த மண்ணில் நடைபெறுவதால் அவர்களுக்கே கோப்பை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஐபிஎல் போல, ஆஸ்திரேலியாவில் பிக் பாஷ் டி20 தொடருக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகம் உள்ளன. பிக் பாஷ் டி20 தொடரின் ஒன்பதாவது சீசன் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இதில், சிட்னி சிக்சர்ஸ் அணி ஏற்கனவே இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இதைத்தொடர்ந்து, நாளை மெல்போர்னில் நடைபெறும் சேலஞ்சர் சுற்றில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் – சிட்னி தண்டர்ஸ் அணிகள் மோதுகின்றன.
இதில், வெற்றிபெறும் அணி, வரும் பிப்ரவரி 8ஆம் தேதி சிட்னியில் நடைபெறும் இறுதி போட்டியில் சிட்னி சிக்சர்ஸ் அணியுடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இந்த நிலையில், இறுதி போட்டியன்று சிட்னியில் மழை பெய்ய 90 சதவீதம் வாய்ப்புள்ளதாக ஆஸ்திரேலிய வானிலை மையம் தெரிவித்துள்ளது. ஒருவேளை இறுதிபோட்டி மழையால் ரத்தாகும் பட்சத்தில், இப்போட்டி சிட்னி சிக்சர்ஸ் அணியின் சொந்த மண்ணில் நடைபெறுவதால் அவர்களுக்கே பிக் பாஷ் கோப்பை வழங்கப்படும் என cricket.com.au இணையதளத்தில் தெரிவித்துள்ளது.
இதையடுத்து, பிக் பாஷ் டி20 தொடரின் இந்த விதிமுறையை ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் விமர்சித்துவருகின்றனர். புள்ளி கணக்கின்படி மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி 20 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், சிட்னி சிக்சர்ஸ் அணி 19 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.