Categories
அரசியல் மாநில செய்திகள்

ரஜினிக்கு என்ன வேலை? அவர் மத்திய அமைச்சரா? இல்ல மாநில அமைச்சரா? சீமான் கண்டனம் …!!

செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்திற்கான இயக்குநர் நியமனத்திற்கும் ஒரு நடிகருக்கும் என்ன தொடர்பு? மத்திய அரசின் அலுவல் பணியிலும், நிர்வாக முடிவிலும் ரஜினிகாந்துக்கு என்ன வேலை? என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை தரமணியில் அமைந்துள்ள மத்திய அரசின் செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தின் முதல் இயக்குநராக ஆர்.சந்திரசேகரன் என்பவரை நியமனம் செய்திருக்கும் மத்திய அரசின் செயல் பெரும் ஐயத்தைத் தோற்றுவிக்கிறது. நீண்ட நெடுநாட்களாகச் செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்திற்கு இயக்குநரை நியமிக்க வேண்டும் எனும் கோரிக்கை கிடப்பில் இருந்தவேளையில், தற்போது நடைபெற்றிருக்கும் நியமனம் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ள நிலையில், அதன் பின்புலத்தில் நடந்தேறிய அரசியல் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.

ரஜினிக்கு என்ன வேலை ?

செம்மொழித்தமிழாய்வு நிறுவனத்திற்கு இயக்குநரை நியமித்த செய்தியைத் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் அதில் ஆட்சியாளர்களின் பெயரோடு நடிகர் ரஜினிகாந்த் பெயரையும் குறிப்பிட்டிருக்கிறார். இதில் ரஜினிகாந்தை குறிப்பிட வேண்டிய நிர்பந்தம் என்ன வந்தது? பிரதமர், முதல்வர், அமைச்சர்கள் உள்ளிட்டவர்கள் தொடர்புடைய மத்திய அரசின் அலுவல் பணியிலும், நிர்வாக முடிவிலும் ரஜினிகாந்துக்கு என்ன வேலை? மத்திய அரசு தனது கீழுள்ள துறையின் பதவிகளுக்கு நியமனம் செய்கிறபோது ரஜினிகாந்துக்கு இவ்வளவு பெரிய முக்கியத்துவம் அளிக்க வேண்டிய நெருக்கடியென்ன?

அவர் என்ன மத்திய அமைச்சரா?

அவர் என்ன மத்திய அமைச்சரா? மாநில அமைச்சரா? மக்கள் பிரதிநிதியா? ஐ.ஏ.எஸ். அதிகாரியா? அவருக்கு எதற்கு நியமனச் செய்தியைக் கூற வேண்டும்? அரசின் எவ்விதப் பதவியிலும் இல்லாத அவருக்கு எதற்கு அளப்பரிய முதன்மைத்துவம்? யார் கொடுத்த நெருக்கடி? ரஜினிகாந்த் என்பவர் ஒரு நடிகர் அவ்வளவுதானே! அதனைத் தாண்டி, மக்களோடு அவருக்கு என்ன தொடர்பு இருக்கிறது? அரசின் செயல்பாடுகளுக்கும், கொள்கை முடிவுகளுக்கும், நிர்வாகச் சீரமைப்புகளுக்கும், நியமன முறைமைகளுக்குமென இவை யாவற்றிற்கும் துளியும் தொடர்பற்றவரை மத்திய, மாநில அரசுகள் தொடர்புடைய ஒரு விவகாரத்தில் எதற்குக் குறிப்பிட்டுப் பதிவிட வேண்டும்? அவரைக் கேட்டுத்தான் நியமனங்கள் நடக்கிறதா? ரஜினிகாந்தை திருப்திப்படுத்தத்தான் சந்திரசேகரனை இயக்குநராக நியமனம் செய்தார்களா?

Rajinikanth: குமாரு.. யாரு இவரு? ரஜினியை ...

வாய் திறக்காத ரஜினி:

எவ்வளவோ அத்தியாவசியப் பிரச்சினைகளுக்கும், வாழ்வாதாரப் போராட்டங்களுக்கும் குறைந்தபட்சமாகத் தனது கருத்தினையோ, நிலைப்பாட்டினையோ கூடத் தெரிவித்திடாத ரஜினிகாந்த் இவ்விவகாரத்தில் வீறுகொண்டு எழுந்து முதல் ஆளாய் நன்றி தெரிவித்திருப்பதற்குக் காரணமென்ன? தமிழுக்கும், தமிழர்களுக்கும் இன்னல்கள் நேரிட்ட எத்தனையோ பேராபத்துமிக்கச் சூழல்களிலெல்லாம் வாய்திறக்காது மௌனியாய் இருந்த ரஜினிகாந்த் இவ்விவகாரத்தில் கடிதத்தின் மூலம் நன்றி பாராட்டியிருப்பதன் அரசியலென்ன? அவரை மகிழ்விக்கத்தான் இந்நியமனம் நடைபெற்றதா? இந்நியமனத்திற்குப் பின்னால் உள்ள பேரங்களும், அரசியல் அழுத்தங்களும் என்னென்ன? யாருக்காக நடந்தேறிய நியமனம் இது?

வன்மையான கண்டனம்:

மத்திய அமைச்சர் ரமேஷ் போக்ரியாலுக்கு எழுதியுள்ள கடிதத்தில், ‘சந்திரசேகரனை நியமனம் செய்ததற்கு நன்றி’எனக் குறிப்பிட்டிருக்கிறார் ரஜினிகாந்த். அப்படியெனில், ரஜினிகாந்த் பரிந்துரை செய்த நபருக்குத்தான் இயக்குநர் பதவி அளிக்கப்பட்டுள்ளதா? எனும் இச்சந்தேகம் நடிகர் ரஜினிகாந்த் எழுதிய கடிதத்தின் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. வெளிப்படைத்தன்மைத் துளியுமின்றி, தனிநபர்களை மகிழ்விக்கப் பரிந்துரைத்த நபரைப் பதவியில் அமர்த்தி அதிகார அத்துமீறலில் ஈடுபட்ட மத்திய அரசின் இச்செயல் வன்மையான கண்டனத்திற்குரியது.

8 way greenways road: என்னது 8 வழிச்சாலைக்கு ...

பதவி விலககுங்க:

ஆகவே, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்காரியால் நிஷாங்க் அவர்கள் நடிகர் ரஜினிகாந்துடனான தனது அலுவல் ரீதியான தொடர்புகளுக்குத் தகுந்த விளக்கம் அளிக்க வேண்டும். செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் இயக்குநர் பதவியை நியமிப்பதில் நடிகர் ரஜினிகாந்த் அவர்களின் தலையீடு இருப்பது அப்பட்டமாகத் தெரிவதால் அதில் உண்மை இருப்பின், தான் எடுத்துக் கொண்ட பதவிப் பிரமாணத்திற்கு எதிராக நடந்து கொண்ட மத்திய அமைச்சர் உடனடியாகத் தனது பதவி விலக வேண்டும் என நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன் என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Categories

Tech |