உனது விதியை படைப்பவன் நீயே என்பதை புரிந்து கொள்.உனக்குத் தேவையான எல்லா வலிமையும் , உதவியும் உனக்குள்ளேயே கூடிக் கொண்டிருக்கின்றன இது சுவாமி விவேகானந்தரின் பொன் மொழிகளில் ஒன்று. நமது நாட்டுக்கு எப்போது சுதந்திரம் வந்தது என்று கேட்டால் சின்னக் குழந்தை கூட விடை சொல்லிவிடும். ஆனால் குடியரசு தினம் பற்றிக் கேட்டால் பல பெரியவர்களே சரியாகப் பதில் சொல்ல இயலாமல் விழிப்பர். நமது மன்னர்கள் ஒற்றுமையாய் இல்லாமல் இந்தியாவைச் சிறு சிறு மாநிலங்கலாய் பிரித்து ஆண்டதால் தான் ஆங்கிலேயர் ஒற்றுமையின்மை காரணம் வைத்து உள்ளே நுழைந்தனர். இந்த நிலை திரும்பவும் வராதிருக்க நமது தியாகிகளின் வீர வரலாற்றினைக் கூறி இளைய தலைமுறைகளை நாட்டுப்பற்று உள்ளவர்களாக வளர்க்க வேண்டியது ஒவ்வொரு பெற்றோர்களின் கடமையும் ஆகும்.
300 ஆண்டுகள் பிரிட்டிஷ்காரர்களிடம் நாம் அடிமைகளாய் இருந்தோம் அந்த 300 ஆண்டுகளுக்கு முன்பு நம் நாடு எப்படி இருந்தது , மன்னர்கள் பலர் ஆண்டனர்.மக்களுக்குச் சுதந்திரம் பற்றி எந்த விழிப்புணர்வும் வரவில்லை. மன்னன் எவ்வழியோ மக்களும் அவ்வழியே என்று வாழ்ந்தனர். மன்னனின் ஆட்சி என்பது முடியாட்சி அவன் வைத்ததே சட்டம் இதில் மக்கள் சுயமாய் சிந்திக்க சுதந்திரம் பற்றி நினைக்கவும் வழி கிடையாது. மன்னனின் வாரிசுகள் அடுத்து அரியணை ஏறுவர் அவர்களின் கொடுங்கோல் ஆட்சியை எதிர்க்கும் சிலரில் வீரமும் துணிவும் உள்ளவன் எப்போதாவது ஆட்சியைக் கைப்பற்றுவதும் உண்டு.
குடியரசு என்பதற்கு நேரடிப் பொருள் குடிமக்களின் அரசு , அதாவது மக்களாட்சி. மக்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப தேர்தல் மூலம் தங்களுடைய தலைவனைத் தேர்ந்தெடுத்து அவர்கள் ஆட்சி நடத்தும் நாடுதான் குடியரசு நாடு .மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள் எப்படி ஆட்சி செய்ய வேண்டும் என்பதை நிர்ணயிப்பது தான் அரசியல் அமைப்பு சட்டம்.மேதைகள் பலர் சேர்ந்து உருவாக்கிய நமது அரசியல் சட்டத்தை ஏற்றுக் கொண்ட நாள் ஜனவரி 26 , 1950. சுதந்திர தினத்தை விட முக்கியமானது குடியரசு தினமாகும் . ஏனென்றால் மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப தங்கள் தலைவரைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். சரியான ஆச்சி இல்லையெனில் தேர்ந்தெடுத்த தலைவரை நீக்கிவிட்டு , வேறொரு நல்ல தலைவரை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.
குடியரசு தினம் நாளை கொண்டாடும் வேளையில் நம்மில் எத்தனை பேர் உண்மையான குடிமக்களாக இருக்கிறோம் என்பதை ஒரு கணம் எண்ணிப் பார்க்க வேண்டும். நாட்டில் சுமார் 60 முதல் 70 சதவீதம் வரையிலான மக்களே உண்மையான குடிமக்களாக இருக்கின்றனர்.காரணம் இவர்கள் மட்டுமே தங்களது வாக்குகளைத் தேர்தல்களின் பதிவு செய்கின்றனர். ஏனையோர் அந்த நாளை விடுமுறையாக கருதி உல்லாசமாக கழிப்பதிலேயே நாட்டம் காட்டுகின்றனர். தேர்தல்களை எவரெல்லாம் உதாசீன படுத்துகிறார்கள் என்று பார்ப்போமேயானால் கல்வி அறிவு கிடைக்க பெறாத , வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள ஏழைகள் அல்ல. மாறாக கற்றறிந்த சான்றோர் என்று பேச்சளவில் சொல்லிக்கொள்ளும் பணக்கார வர்க்கத்தினரே என்பது மிகவும் வேதனையான விஷயம்.
எல்லோரும் நம் கடமைகளை சரிவர செய்வோம் ஒருசொல் உன்னையும் என்னையும் இணைக்கும்மானால் , ஒரு சொல் ஜாதி , மதம் , இனம், மொழி கடந்த ஒன்றானால், ஒரு சொல் நம் சத்துருவிற்கும் சற்று பயம் வரும்மானால், ஒரு சொல் உலகமே கண்டு கொஞ்சம் வியக்கும்மானால் ,ஒரு சொல் சில இளைஞர்களின் சக்தி என்று இருக்குமேயானால், ஒருசொல் இயற்கை வளங்களின் இருப்பிடமாக இருக்கும்மானால், ஒரு சொல் இழிந்தாள் உடல் கொதிக்கும்மானால் ஒரு சொல் நம் ஒவ்வொருவருக்கும் பெருமிதம் என்றாள் அது இந்தியாவாக தான் இருக்கமுடியும் நான் இந்தியன் என்பதில் பெருமை அடைகிறேன்.ஜெய்ஹிந்த்