இந்தியாவில் மாநிலங்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஜிஎஸ்டி நிலுவை தொகை குறித்து நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட ஒரு கேள்விக்கு மத்திய நிதி இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது, கடந்த 5 வருடங்களாக மாநிலங்களுக்கு மத்திய அரசு ஜிஎஸ்டி நிலுவை தொகையை வழங்கி வருகிறது. கொரோனா காலத்தின் போது ஜிஎஸ்டி வருவாய் போதுமான அளவில் இல்லாத போதும் கடன் பெற்று மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி நிலுவை தொகை வழங்கப்பட்டது. அதன்படி கடந்த 2020-21 ஆம் நிதி ஆண்டில் 1.1 லட்சம் கோடியும், 2021-22 ஆம் நிதி ஆண்டில் 1.59 லட்சம் கோடியும் ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டுள்ளது.
அதன் பிறகு கடந்த ஜூன் மாத நிலவரப்படி மாநிலங்களுக்கு 17,176 கோடி ரூபாய் ஜிஎஸ்டி இழப்பீடு வழங்கப்படாமல் நிலுவையில் இருக்கிறது என்று கூறினார். மேலும் மற்றொரு கேள்விக்கு பதில் அளித்த மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தமிழகத்துக்கு 1,200 கோடி ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட வேண்டி இருக்கிறது என்றார். அதோடு மாநில கணக்காயரின் ஒப்புதல் சான்றிதழ் இன்னும் மத்திய அரசுக்கு இன்னும் கிடைக்கப்பெறாமல் இருப்பதால்தான் நிலுவை தொகை தமிழகத்திற்கு வழங்கப்படாமல் இருப்பதாகவும் தெரிவித்தார்.