பாத்திமா லத்திப் (18) என்ற கேரளாவைச் சேர்ந்த 18 வயது மாணவி, சென்னை ஐஐடி கல்லூரியில் முதுகலை (எம்.ஏ.) மனிதநேயம் முதலாம் ஆண்டு படித்துவந்தார். இவர் ஐஐடி கல்லூரியில் உள்ள விடுதியில் தங்கிப் படித்துவந்தார்.இவர் தினமும் கேரளாவில் உள்ள தனது பெற்றோரிடம் செல்ஃபோன் பேசுவதை வழக்கமாக வைத்திருந்துள்ளார். இந்நிலையில், நேற்றிரவு தனது பெற்றோரிடம் பேசாமல் இருந்ததாகக் கூறப்படுகிறது.
பின்னர் இன்று காலை பாத்திமாவின் தாய் சஜிதா லத்திப் பலமுறை பாத்திமாவை செல்ஃபோனில் அழைத்தும் எடுக்காததால் விடுதி காவலாளியை தொடர்புகொண்டுள்ளார். இதையடுத்து, காவலாளி சென்று பார்க்கையில் பாத்திமாவின் அறை மூடி இருந்ததால் உடைத்து பார்க்கும்போது பாத்திமா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.
இதனையடுத்து காவலாளி அளித்த தகவலின் அடிப்படையில் கோட்டூர்புரம் காவல் துறையினர் விடுதிக்கு விரைந்து பாத்திமாவின் உடலை உடற்கூறு ஆய்வுக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இது தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து முதற்கட்ட விசாரணையில் குடும்பப் பிரச்னை காரணமாக மாணவி உயிரிழந்திருக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.