அதிமுகவின் மூத்த தலைவராக இருக்கும் பண்ருட்டி ராமச்சந்திரனை ”அதிமுகவின் ஆலோசகராக” ஓ.பன்னீர்செல்வம் அறிவித்து அறிக்கை வெளியிட்டார். அதைத் தொடர்ந்து அவரை நீக்கி எடப்பாடி பழனிச்சாமி மற்றொரு அறிக்கை வெளியிட்டு அதிரடி காட்டினார். இந்த நிலையில் சற்றுமுன் பண்ருட்டி ராமச்சந்திரனை சந்தித்து பேசிய ஓ பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவரிடம், அதிமுகவின் ஒற்றுமைக்காக அனைவரையும் சந்திப்பேன் என்று சொன்னீர்கள் என்ற கேள்விக்கு, பொறுத்திருந்து பாருங்கள்.கடந்த காலங்களில் தலைவர்களுடன் இருந்தவர்கள், அம்மாவோடு இருந்தவர்கள் எல்லாரையும் உறுதியாக சந்தித்து, அவர்களது ஆசியை பெறுவோம் என தெரிவித்தார். எடப்பாடி பழனிச்சாமி பண்ருட்டி ராமச்சந்திரனை நீக்கிவிட்டதாக அறிவித்துள்ளார் என்ற கேள்விக்கு, அதை அவரிடம் தான் கேட்க வேண்டும் என ஓபிஎஸ் தெரிவித்தார்.
மேலும் பேசிய ஓபிஎஸ், பண்ருட்டி ராமச்சந்திரன் மூத்த அரசியல் தலைவர். நல்ல பல கருத்துக்களை தமிழக மக்களிடம் எடுத்துச் சொல்லிக் கொண்டிருக்கிறார். புரட்சித்தலைவர் எந்த நோக்கத்திற்காக இந்த இயக்கத்தை ஆரம்பித்தாரோ, புரட்சித்தலைவி அம்மா அவர்கள் இந்த இயக்கத்தை எந்த நோக்கத்துக்காக மாபெரும் இயக்கமாக வளர்த்தார்களோ, அந்த நோக்கம், கொள்கைகளை பற்றி அண்ணன் பண்ருட்டி ராமச்சந்திரன் அவர்கள் தமிழக மக்களுக்கு சொல்லுகின்ற போது, அந்த கருத்தை.. கொள்கைகளை மக்கள் ரசிப்பார்கள் என தெரிவித்தார்.