Categories
அரசியல் மாநில செய்திகள்

என்ன ? பேசி இருக்கீங்க… மக்களவையில் விளாசிய திருமா …. !!

குடியரசுத் தலைவரின் உரை சனாதன அரசை பாராட்டும் விதமாக இருப்பதாக மக்களவையில் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகவும், குடியரசுத் தலைவரின் உரையை விமர்சித்தும் இன்று மக்களவையில் திருமாவளவன் உரையாற்றினார். அப்போது, ” குடியரசுத் தலைவர் கடந்த ஆண்டில் பல புரட்சிகர சட்டங்கள் நிறைவேற்றப்பட்டதாக மத்திய அரசை பாராட்டியிருக்கிறார். அண்டை நாட்டிலுள்ள சிறுபான்மை மக்களுக்கு இந்த அரசு பாதுகாப்பு வழங்கும் விதமாக குடியுரிமை திருத்தச் சட்டத்தை நிறைவேற்றியுள்ளது என்று பேசியுள்ளார்.

ஆனால் நடைமுறையில் இந்த அரசு சனாதன அரசாக உள்ளது. இங்கு சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பு இல்லை. தலித் மற்றும் பழங்குடியின மக்களுக்கு பாதுகாப்பு இல்லை. குடியுரிமை திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகு நாடு முழுவதும் வன்முறை ஏற்பட்டுள்ளது. நாடே கொந்தளிப்பாக இருக்கும் போது இந்த அரசை குடியரசுத் தலைவர் பாராட்டியிருப்பது வேதனையளிக்கிறது.

குடியரசுத் தலைவர் தனது உரையில் மகாத்மா காந்தி மற்றும் அம்பேத்கர் உள்ளிட்ட தலைவர்களைச் சுட்டிகாட்டி அவர்களின் கொள்கைகளை நிறைவேற்றுவதற்கான அரசுதான் இந்த அரசு என்று கூறியிருக்கிறார். இது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. குடியரசுத் தலைவரின் உரை இந்த சனாதன அரசை பாராட்டும் விதமாக இருக்கிறது.

மத்திய அரசு நிறைவேற்றத் துடிக்கும் தேசிய மக்கள் தொகை, தேசிய குடிமக்கள் பதிவேடு உள்ளிட்ட சட்டத்தை கைவிடவேண்டும். குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும். அயல் நாட்டிலுள்ள சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பாக இருக்கும் அரசு இது என்று குடியரசுத் தலைவர் கூறுகிறார். ஆனால், உண்மையில் உள்நாட்டில் சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பில்லை” என்றார்.

Categories

Tech |