1010 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய ஒரு கட்டுமானம் இன்றளவும் அதன் பொலிவு குறையாமல் நிலைத்து நின்று புகழ் பரப்பிக் கொண்டிருக்கிறது என்றால் அது தஞ்சை பெரிய கோவில் தான் இக்கோவிலில் குறிப்பிடத்தகுந்த சிறப்பம்சங்கள் சிலவற்றை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.
1010 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது தஞ்சை பெரிய கோவில். காவிரி பாயும் சமதளப் பகுதியில் இது போன்றதொரு கோவில் கட்டுவதற்கான கற்களும் பெரிய பாறைகளை இல்லாத இடத்தில் அரியவகை கற்களைக் கொண்டுவந்து உலகம் வியக்கும் வகையிலான கோவிலை கட்டியிருக்கிறார் பேரரசன் ராஜராஜ சோழன். கற்களே கிடைக்காத காவிரி சமவெளிப் பகுதியில் 15 தளங்கள் கொண்ட 216 அடி உயர கோயில் எழுப்பப்பட்டுள்ளது.
இப்படி ஒரு பிரம்மாண்ட கற்கோயில் 7 ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்டது மாபெரும் மனித முயற்சியின் சாத்திய கூறுகளாகவே பார்க்கப்படுகிறது. இந்தக் கோவிலின் கருவறை கோபுரம் ராஜராஜ சோழன் காலத்தில் கட்டப்பட்டது என்றும், மற்றவை பிற்காலங்களில் கட்டப்பட்டவை என்றும் ஆராச்சியாளர்கள் குறிப்பிடுகிறார்கள். ராஜராஜசோழனின் தமிழ் பற்றை கூறும் ஆய்வாளர்கள் அதற்கான விவரங்களையும் கூறுகின்றனர்.
அதன்படி தமிழ் உயிரெழுத்துக்கள் பன்னிரண்டை குறிக்கும் வகையில் சிவலிங்கத்தின் உயரம் 12 அடி ஆகவும், மெய்யெழுத்துக்கள் 18 குறிக்கும் வகையில் சிவலிங்க பீடத்தின் உயரம் 18 அடி ஆகவும், உயிர்மெய் எழுத்துக்கள் 216 குறிக்கும் வகையில் கோவில் கோபுரத்தின் உயரம் 216 அடியாக உள்ளது.
இந்த கோவிலை கட்டிய பேரரசன் ராஜராஜ சோழனின் பெயர் கல்வெட்டில் இடம் பெற்றுள்ளதை போல கோவில் கட்டுமானப் பணி, சிற்ப பணியில் ஈடுபட்டவர்கள் பெயர்களும் அவர்களுக்கு மோர் கொடுத்து உதவிய பெண் உட்பட அனைவரின் பெயர்களும் கல்வெட்டாக பொறிக்கப்பட்டு காலத்தால் அழியா சாட்சியங்களாக நிற்கின்றன.
மேலும் இந்த கோவிலை காலத்தால் அழிக்க முடியாத படி உருவாக்க நினைத்த ராஜராஜசோழன் கோவிலைச் சுற்றி பல கிலோமீட்டர் தொலைவில் பெரிய துளையிட்டு அதில் மணல் நிரப்பி அதன் மீது கோவில் கட்டியுள்ளார். இதனால் எப்பேர்பட்ட நிலநடுக்கம் வந்தாலும் அது கோவிலில் சிறிதளவுகூட அதிர்வலையை ஏற்படுத்தாது. இத்தகைய பொறியியல் கட்டுமான தொழில் நுட்பத்தை ராஜராஜசோழன் கையாண்டிருப்பது உலகநாடுகளை மிரளசெய்துள்ளது.