மே 3ம் தேதி வரை சில சேவைகள் இயங்கலாம் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் நாடு முழுவதும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும், உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது. இதனால் மக்களிடையே அச்சம் இருந்தாலும், குணமடைந்து வீடு திரும்பும் எண்ணிக்கையின் விகிதம் மக்களுக்கு கொரோனவை வெல்ல முடியும் என்ற புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது. இதனிடையே மத்திய, மாநில அரசுகளும் கொரோனவை கட்டுப்படுத்தும் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
கூடுதலாக நிதியை ஒதுக்கி மருத்துவ, சுகாதார பணிகளை முடுக்கி விட்டுள்ளனர். கொரோனாவுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கவில்லை என்பதால் சமூகவிலகள் ஒன்றே கட்டுப்படுத்துவதற்கு சிறந்த வழி என்ற உலக சுகாதார அமைப்பின் அறிவுறுத்தலை ஏற்று உலக நாடுகள் மக்களை வீட்டுக்குள் முடக்கி வைத்துள்ளனர்.
ஊரடங்கு தளர்வு :
இந்தியாவும் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதில் பொருளாதார ரீதியில் பலருக்கும் சுமைகளை ஏற்பட்டாலும், உடல் நலம் சார்ந்த நடவடிக்கை என்பதால் மக்களும் கொரோனவை விரட்ட அரசின் ஊரடங்குக்கு ஒத்துழைப்பு கொடுத்து வருகின்றனர். இதனிடையே மத்திய அரசு ஊரடங்கு உத்தரவை பிறப்பிக்கும் போது ஏப்ரல் 20ஆம் தேதிக்கு மேல் சில நடவடிக்கைகள், சேவைகளை தொடர ஊரடங்கில் சில தளர்வு இருக்கும் என்று அறிவித்தது.
அரசு அனுமதி :
இது தொடர்பான பல்வேறு சுற்றறிக்கையை மத்திய அரசு அவ்வப்போது வெளியீட்டு வந்த நிலையில் தற்போது மேலும் சில சேவைகளை தொடர அரசு அனுமதி அளித்துள்ளது.மத்திய அரசின் அறிவிப்பில், போன் ரீசார்ஜ், ரீசார்ஜ் கடைகள் இயங்கும், மின்விசிறி பழுது பார்க்கும் கடை களும் இயங்கலாம் என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதே போல நகர்ப்பகுதியில் மாணவர்களுக்கான புத்தகக் கடைகளும் இயங்கலாம் என்று மத்திய உள்துறை அனுமதி அளித்துள்ளது.
பொழுதுபோக்கு :
கொரோனா பரவ தொடங்கிய நாள் முதல் மத்திய அரசு 21 நாள் ஊரடங்கு அறிவித்தது, அதனை தொடர்ந்து மேலும் 19 நாட்களுக்கு நீட்டித்து மே 3 வரை அறிவித்துள்ளது. இதனால் கிட்டத்தட்ட 40 நாட்களாக மக்கள் வீட்டிற்கு உள்ளேயே முடங்கி இருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் அத்தியாவசிய கடைகளைத் தவிர பிற கடைகள் இயங்காததால் வீட்டில் முடங்கி இருக்கும் இளைஞர்களுக்கு மொபைல் போன் பெரும் பொழுதுபோக்கு சாதனமாக உருவெடுத்தது. ஆனாலும் அவர்கள் நினைத்த நேரத்தில் இன்டர்நெட் பயன்படுத்த ரீ சார்ஜ் செய்வதற்கான கடைகள் இல்லை.
ஷாக்கான மகிழ்ச்சி :
இணையம் வழியாக ரீசார்ஜ் செய்து கொள்ளலாம் என்றால் வேலைவாய்ப்பு முடங்கி அக்கௌண்டில் பேலன்ஸ் இல்லை. இதனால் இருக்கும் பணத்தை வைத்து கடைகளிலேயே ரீசார்ஜ் பண்ண வேண்டிய கட்டாயத்தில் இருந்த மொபைல் வாசிகளுக்கு ரீசார்ஜ் கடை இயங்கும் என்ற அரசின் உத்தரவு ஒரு ஷாக்கான மகிழ்ச்சி என்றால் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. வீட்டிலே இருக்கும் அவர்களுக்கு ஒரே பொழுதுபோக்கு சாதனம் மொபைல் என்பதால் பலருக்கும் இது சந்தோஷத்தை ஏற்படுத்தியுள்ளது.