இந்தியாவில் நடத்தப்படும் சையத் அலி முஷ்டாக் டி20 கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்றுவருகிறது. ஐந்து பிரிவுகளின் கீழ் நடத்தப்படும் போட்டிகளில் பல்வேறு அணிகள் பங்கேற்றுள்ளன. இதனிடையே இன்று டி பிரிவில் நடைபெற்ற போட்டியில் மும்பை – அசாம் அணிகள் மோதின.
இப்போட்டியில் மும்பை அணியின் தொடக்க வீரராக பிரித்வி ஷா களமிறங்கினார். இவரை கடந்த சில தினங்களுக்கு முன்பாக மும்பை அணியில் சேர்த்தனர். தடை செய்யப்பட்ட ஊக்கமருந்தை பயன்படுத்தியதாகக் கூறி கடந்த ஜூலை மாதம் பிசிசிஐ பிரித்வி ஷாவுக்கு எட்டு மாதம் தடை விதித்தது.
இந்தத் தடையானது மார்ச் 16ஆம் தேதி முதல் நவம்பர் 15ஆம் தேதி வரை விதிக்கப்பட்டிருந்தது. இதனிடையே தடைக்காலம் முடிவடைந்த நிலையில் பிரித்வி ஷா இன்றையப் போட்டியில் களமிறங்கினார். அவர் களமிறங்கிய முதல் போட்டியிலேயே அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
அசாம் அணியின் பந்துவீச்சை நேர்த்தியாக எதிர்கொண்ட அவர் 32 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார். பிரித்வி ஷா, அரைசதம் அடித்த பின் மைதானத்தில் நடுவில் நின்றுகொண்டு தனது பேட்டை தூக்கி காண்பித்து கைகளை அசைத்தார். அது ”இனி என் பேட் தான் பேசும்” என்பது போன்று இருந்தது. இந்த வீடியோவை பிசிசிஐ உள்ளூர் கிரிக்கெட் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டனர். இதற்கு ரசிகர்கள் கலவையான விமர்சனங்களைப் பதிவிட்டு வருகின்றனர்.
இப்போட்டியில் பிரித்வி ஷா 39 பந்துகளில் ஏழு பவுண்டரிகள், இரண்டு சிக்சர்கள் உட்பட 63 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். மேலும் தொடக்க ஜோடியாக களமிறங்கிய பிரித்வி ஷா – ஆதித்யா தாரே இணை முதல் விக்கெட்டுக்கு 138 ரன்கள் சேர்த்தது குறிப்பிடத்தக்கது.
பின்னர் இறுதி கட்டத்திலும் சிறப்பாக ஆடிய மும்பை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 206 ரன்களைக் குவித்தது. இதைத் தொடர்ந்து இமாலய இலக்கை சேஸ் செய்த அசாம் அணி, 123 ரன்களை மட்டும் எட்ட முடிந்ததால் 83 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றிபெற்றது.
கடந்தாண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அறிமுகமான முதல் டெஸ்ட் போட்டியிலேயே பிரித்வி ஷா சதம் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்க விஷயமாகும்.
Welcome back! He is making a comeback today and @PrithviShaw makes it a memorable one with a fine-half century for Mumbai against Assam in @Paytm #MushtaqAliT20. pic.twitter.com/hiBfiElhed
— BCCI Domestic (@BCCIdomestic) November 17, 2019