தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருக்கும் சிவகார்த்திகேயன் டான் படத்திற்கு பிறகு பிரின்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்தார். இந்த படத்தை தெலுங்கில் வெளியான ஜதி ரத்னலு படத்தை இயக்கிய அனுதீப் இயக்கியிருந்தார். இந்த படம் கடந்த தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் ரிலீசான நிலையில் ஒரு பக்கம் பாசிட்டிவ்வான விமர்சனங்கள் வந்தாலும், மற்றோரு பக்கம் நெகட்டிவ்வான விமர்சனங்களும் வந்தது. இந்நிலையில் பொதுவாக சிவா படம் என்றாலே அதில் காமெடிக்கு பஞ்சம் இல்லாமல் இருக்கும்.
இதனால் பிரின்ஸ் திரைப்படத்திலும் ரசிகர்கள் காமெடியை அதிக அளவில் எதிர்பார்த்த நிலையில், அந்த அளவுக்கு காமெடி சீன் ஒர்க் அவுட் ஆகவில்லை என்று பலரும் விமர்சித்தனர். ஆனால் பிரின்ஸ் திரைப்படத்துடன் மோதிய கார்த்தியின் சர்தார் பாக்ஸ் ஆபிஸில் 100 கோடியை கடந்து வசூல் சாதனை புரிந்து வருகிறது. இந்நிலையில் நேற்று குருமூர்த்தி என்ற திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் தயாரிப்பாளர் கே. ராஜன் கலந்து கொண்டு பேசினார்.
அவர் பேசியதாவது, ஒரு படம் வெற்றி பெற்றால் அதற்கு காரணம் படத்தின் இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் கதாசிரியர்கள். ஆனால் ஒரு படம் தோல்வி அடைந்தால் அதற்கு முழு காரணம் இயக்குனர் மட்டுமே. சிவகார்த்திகேயன் நடித்த டான் மற்றும் டாக்டர் திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது. ஆனால் அதற்குப் பிறகு வெளியான பிரின்ஸ் திரைப்படம் வெற்றி பெறாமல் படுதோல்வி அடைந்து விட்டது. மேலும் இதற்குக் காரணம் பிரின்ஸ் திரைப்படத்தின் இயக்குனர் மட்டும்தான் என்று கூறியுள்ளார்.