பாஸ்டேக் ரீசார்ஜ் என்பது வாகன உரிமையாளர்களுக்கு அவ்வப்போது பிரச்சனைதரும் விஷயமாகி விட்டது. பயனர்களுக்கான கட்டண விருப்பங்களை ஒருங்கிணைக்க வங்கிகள் புதிய மற்றும் எளிதான வழிகளைக் கொண்டு வருகிறது. அந்த அடிப்படையில் வாட்ஸ்அப் வாயிலாக பாஸ்டேக் ரீசார்ஜ் செய்ய IDFC First Bank புது முயற்சியை முன்னெடுத்து இருக்கிறது. WhatsApp -ன் “வாட்ஸ்அப்பில் பணம் செலுத்துதல்” எனும் புது அம்சம் வங்கியின் வாடிக்கையாளர்களுக்கு பாஸ்டேக் ரீசார்ஜ் செய்ய உதவும். IDFC FIRST வாடிக்கையாளர்கள் தங்களது FASTagகளை IDFC FIRSTன் WhatsApp chatbot வாயிலாக ரீசார்ஜ் செய்யலாம். முழுமையான ரீசார்ஜ் சாட்டிங் வாயிலாகவே செய்யலாம் என்பது இதன் சிறப்பம்சமாகும்.
வாட்ஸ் அப்-ஐ பயன்படுத்தி உங்களது ஐடிஎப்சி முதல் பாஸ்டேக்கை ரீசார்ஜ் செய்வது எவ்வாறு என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள். IDFC FIRST வங்கி வாடிக்கையாளர்கள் +919555555555 என்ற வங்கியின் அதிகாரப்பூர்வமான வாட்ஸ்அப் சாட்பாட் எண்ணுக்கு “ஹாய்” என அனுப்புவதன் வாயிலாக பாஸ்ட்டேக் ரீசார்ஜ் செய்யலாம். வாட்ஸ் அப் சாட்டிங் வாயிலாக ரீசார்ஜ் விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கும்போது, எவ்வளவு ரீசார்ஜ் செய்ய வேண்டுமோ, அத்தொகையை உள்ளிட்டு OTP வாயிலாக பரிவர்த்தனையை அங்கீகரிக்க வேண்டும். அதன்பின் பரிவர்த்தனையை உறுதிப்படுத்தும் செய்தி மொபைல்போனுக்கு வரும்.
இந்த புது சேவை வேறு எந்த மொபைல் ஆப் (அல்லது) நெட்பேங்கிங் போர்ட்டலிலும் உள் நுழையாமல் WhatsAppல் பணம் செலுத்துதல் வாயிலாக ரீசார்ஜ் செய்ய உதவும். இது வங்கியின் மில்லியன்கணக்கான FASTag பயனாளர்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும் செய்தியாக இருக்கும். வாட்ஸ்அப்பில் பணம் செலுத்துவதால் பயனாளர்கள் தங்களது தொடர்புகளிலிருந்து யூனிபைட் பேமென்ட் இன்டர்பேஸ் (யுபிஐ) வாயிலாக வாட்ஸ்அப் செய்தியை அனுப்புவது போன்று எளிதாக பணம் அனுப்பவும் பெறவும் அனுமதிக்கிறது. ஒவ்வொரு கட்டணத்துக்கும் பயனர் தனிப்பட்ட UPI-PIN ஐ உள்ளிடவேண்டும். IDFC FIRST வங்கியின் WhatsApp பேங்கிங் சேனல் மூலமாக பயனாளர்கள் சேமிப்புகணக்குகள், கிரெடிட்கார்டுகள், கடன்கள், FASTag போன்றவற்றிற்காக 25க்கும் அதிகமான சேவைகளை அணுகலாம்.
இச்சேவைகளின் பட்டியலில் FASTag வாங்குதல் மற்றும் ரீசார்ஜ் போன்றவற்றை வங்கி தற்போது சேர்த்துள்ளது. ஐடிஎஃப்சி பர்ஸ்ட் வங்கி இதுவரையிலும் சுமார் 9 மில்லியன் பாஸ்டேக்குகளை வழங்கி இருக்கிறது. IDFC FIRST வங்கி 420 டோல் பிளாசாக்கள் மற்றும் 20 வாகன நிறுத்தும் இடங்களில் FASTag வாயிலாக பணம் செலுத்துகிறது. இது மாதாந்திர டோல்மதிப்பு செயலாக்கத்தில் 40 % சந்தைப் பங்கைக் கொண்டு உள்ளது. IDFC FIRST வங்கி, 45 % சந்தைப்பங்கைக் கொண்ட மிகப் பெரிய பார்க்கிங் சேவை நிறுவனமாகவும் உருவெடுத்துள்ளது. IDFC FASTag-ஐ பயன்படுத்தி பயனாளர்கள் HPCL பெட்ரோல் பம்புகளிலும் பணம் செலுத்தலாம். இது சுமார் 19,000 HPCL விற்பனை நிலையங்களில் ஏற்றுக் கொள்ளப்படுகிறது.