தமிழ்நாட்டில் கடந்த மூன்று ஆண்டுகளாக பல்வேறு காரணங்களால் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதனால், தேவைகளை பூர்த்தி செய்துகொள்ளவும், கோரிக்கைகளை தெரிவிக்கவும் மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர். மேலும், சிறப்பு அலுவலர்களின் செயல்பாடுகள் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே, இந்த ஆண்டு இறுதிக்குள் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அதன்படி, மாநில தேர்தல் ஆணையர் பழனிச்சாமி, கடந்த வாரத்தில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் ‘காணொலிக் காட்சி’ (வீடியோ கான்ஃபரன்சிங்) மூலம் ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில், வாக்குச்சாவடி மையங்கள், வாக்கு இயந்திரங்கள் சரிபார்த்தல் உள்ளிட்ட பணிகள் வேகமாக நடைபெறத் தொடங்கியுள்ளன. இன்று மாலை 5 மணிக்கு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் மாநில தேர்தல் ஆணையர் பழனிச்சாமி மீண்டும் ‘காணொலி காட்சி’ மூலம் ஆலோசனை நடத்த உள்ளார்.
அப்போது, அனைத்து மாவட்டங்களிலும் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளனவா, முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளனவா என்பது குறித்து ஆலோசனை செய்து, நவம்பர் இறுதிக்குள் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதற்கான தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படலாம் என மாநில தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதனை உறுதிப்படுத்தும் விதமாக மாநிலத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும், தங்களின் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணிகளைத் தொடங்கியுள்ளன. அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகளும் உட்கட்சிக் கூட்டங்களை நடத்துவதில் ஆர்வம் காட்டி வருகின்றன.