மேல்நிலை வகுப்புகள் மற்றும் பாலிடெக்னிக் வகுப்புகள் எப்பொழுது துவங்கும் என விளக்கம் அளிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர்.
பள்ளிக்கு சென்று படிக்காமல் நேரடியாக பத்தாம் வகுப்பு தேர்வு எழுத ஹால் டிக்கெட் வாங்கியிருந்த மாணவர்களுக்கான தனித்தேர்வர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 11ம் வகுப்பு மற்றும் பாலிடெக்னிக் மாணவர்களின் சேர்க்கையானது ஆகஸ்ட் 24ல் தொடங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், தனி தேர்வர்களை எழுத இருந்த மாணவர்களை தேர்ச்சி பெற்றதாக அறிவிக்காமல் பாரபட்சம் பார்த்தால், அவர்கள் ஒரு வருடத்தை இழந்துவிடுவார்கள் என மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கை நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.ஹேமலதா ஆகியோரின் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அந்த விசாரணையில் தனித்தேர்வர்களுக்கான தேர்வுகள் செப்டம்பர் 21 முதல் 26ஆம் தேதி வரை நடத்த உள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருப்பதால், முடிவுகள் வெளிவர ஒரு மாத காலம் வரை ஆகும் என்பதை சுட்டிக்காட்டி மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. மேலும் அந்த விசாரணையில் மேல்நிலை வகுப்புகள் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகள் எப்போது துவங்கலாம் என்பது பற்றி விளக்கம் கொடுக்க தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.