டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்களை கண்டுபிடிக்க 50 தனிப்படைகள் அமைக்கப்ட்டுள்ளது.
தமிழகத்தில் நேற்று மட்டும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 57 அதிகரித்து 124ஆக உயர்ந்தது. புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்ட 57 பேரில் 45 பேர் டெல்லி நிஜாமுதீன் மாநாட்டில் பங்கேற்றவர்கள் என்று தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்தார். டெல்லி நிஜாமுதீன் மாநாட்டில் பங்கேற்ற 1,131 பேரில் 515 பேர் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளனர். 616 பேரை தேடும் பணி நடைபெற்று வருகிறது.
தொடர்பு கொள்ள முடியாதவர்கள் தாமாக முன்வந்து மாவட்ட நிர்வாகத்தை தொடர்பு கொள்ள வேண்டும். சிலரை தொடர்பு கொண்ட நிலையில் பலரை மாவட்ட நிர்வாகத்தால் தொடர்பு கொள்ள முடியவில்லை. செல்போனை ஸ்விட்ச் ஆஃப் செய்துள்ளனர். உளவுத் துறை மூலமாக கணக்கெடுப்பு எடுத்து வருகிறோம் என்று சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்திருந்தார்.
மேலும் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும். உரிய நேரத்தில் சிகிச்சை எடுத்துக் கொண்டால் நோய்த் தொற்று ஏற்படுவதை தடுக்க இயலும் என்று சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்த நிலையில் மீதமுள்ளவர்களை கண்டறிய 50 தனிப்படைகள் அமைக்கப்ட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை தமிழக அரசு தெரிவித்துள்ளது.