ஐபிஎல் தொடரில் நேற்று (அக்.31) நடைபெற்ற லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய பெங்களூரு அணி வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 7 விக்கெட்டுகளை இழந்து 120 ரன்களை மட்டுமே எடுத்தது.
இதனைத் தொடர்ந்து எளிய இலக்கை நோக்கிக் களமிறங்கிய ஹைதராபாத் அணிக்கு தொடக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. அணியின் கேப்டன் டேவிட் வார்னர் 8 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.
பின்னர் ஜோடி சேர்ந்த மனீஷ் பாண்டே-சஹா இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி, அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படித்தி வந்த மனீஷ் பாண்டே, 26 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
மறுமுனையில் தொடர்ந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த சஹாவும் 39 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். பின்னர் வந்த ஜேசன் ஹோல்டரின் அதிரடியான ஆட்டத்தால் ஹைதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட இலக்கை 14.1 ஓவர்களில் எட்டியது.
இதன் மூலம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. அந்த அணியில் அதிகபட்சமாக விருத்திமான் சஹா 39 ரன்களைக் குவித்தார்.