ராமநாதபுரம் மாவட்டத்தில் மூதாட்டி அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலி திடீரென மாயமான நிலையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் அச்சுந்தன்வயல் பகுதியில் சூரஜா(60) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் அவரது மகள் சுமதியுடன் நேற்று முன்தினம் ராமநாதபுரம் பாரதிநகர் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சென்றுகொண்டிருந்துள்ளனர். இதனையடுத்து பேருந்தில் சென்ற இவர்கள் பாரதிநகரில் இறங்கி மருத்துவமனைக்கு நடந்து சென்றுள்ளனர்.
அப்போது சூரஜாவின் கழுத்தில் இருந்த 5 பவுன் தங்க சங்கிலியை பார்த்தபோது காணாமல்போயிருந்துள்ளது. இதனை யாரேனும் திருடியிருக்கலாம் என்ற அச்சத்தில் சூரஜா உடனடியாக கேணிக்கரை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.