ஒரே பெயரால் குழப்பத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட நபரை வெளியில் அனுப்பியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலத்தில் குண்டூர் மாவட்டம் காட்டூர் மருத்துவக் கல்லூரியில் நேற்று கொரோனா பரிசோதனைக்காக சிலர் அனுமதிக்கப்பட்டனர். அதில் ஒரு பெயரில் இருந்த இருவருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. ஆனால் ஒரே மாதிரி பெயர் இருந்த காரணத்தால் தொற்று இருந்தவரை மருத்துவ குழு உங்களுக்கு தொற்று இல்லை எனக்கூறி அரசு அறிவித்த படி 2000 ரூபாய் கொடுத்து டிஸ்சார்ஜ் செய்து விட்டனர்.
அதன் பிறகு நடந்த தவறை உணர்ந்து அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள் தொற்றுடன் வெளியில் அனுப்பிய நபரின் வீட்டிற்கு சென்று மருத்துவமனைக்கு வரும் படி அழைத்துள்ளனர். ஆனால் மருத்துவமனைக்கு வர மாட்டேன் என அந்த நபர் அடம்பிடித்துள்ளார். இதன் காரணமாக நடந்த விவரங்களை காவல் துறையினருக்கு தெரிவித்து அவர்களின் உதவியோடு தொற்று ஏற்பட்ட நபரை ஆம்புலன்ஸ் மூலம் என்ஆர்ஐ மருத்துவக் கல்லூரிக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
இந்த குழப்பத்தினால் தொற்று ஏற்பட்டவரின் வீட்டில் இருந்த நான்கு பேரும் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அதோடு அவர் யார் யாரை தொடர்பு கொண்டார் என்பது குறித்தும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த குழப்பத்திற்கு சம்பந்தப்பட்ட மருத்துவ குழு மீது நடவடிக்கை எடுக்கப்படும் என குண்டூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.