கொல்லிமலையில் இருந்து சுற்றுலா வாகன உரிமையாளர்கள் திரும்பி கொண்டிருக்கும்போது கொண்டை ஊசி வளைவில் வேன் கவிழ்ந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் மிகவும் அழகிய சுற்றுலா தலமாக கொல்லிமலை விளங்கி வருகின்றது. இந்நிலையில் சென்னை கொளத்தூர் சுற்றுலா வாகன உரிமையாளர்கள் நலசங்கத்தை சேர்ந்த 60 பேர் 4 வேன்களில் கொல்லிமலைக்கு சென்றுள்ளனர். இதனையடுத்து அவர்கள் மலையை சுற்றிபார்த்துவிட்டு மீண்டும் வேனில் மலையில் இருந்து கீழே இறங்கி கொண்டிருந்துள்ளனர்.
அப்போது 52-வது கொண்டை ஊசி வளைவில் இருந்து 51-வது கொண்டை ஊசி வளைவில் திரும்பிகொண்டிருக்கும் போது ஒரு வேன் கட்டுபாட்டை இழந்து கவிழ்ந்துள்ளது. இதில் வேனில் இருந்த டிரைவர் உட்பட 15 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பியுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்து சென்ற காவல்துறையினர் வேனில் இருந்தவர்களை மீட்டு மாற்று வாகனம் மூலம் நாமக்கலுக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் அப்பகுதியில் பெய்த மழையின் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.