பி.ஏ.எஸ் தயாரிப்பு நிறுவன உரிமையாளர் சோமி கோலியின் மனைவி தோனியை பார்த்து யார் இவர் என்று கேட்ட சுவாரஸ்யமான நிகழ்வுகளை பகிர்ந்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனிக்கு கிரிக்கெட் உபகரணங்களை வழங்கிய சோமி கோலி என்பவர் தோனியை குறித்த ஒரு சில சுவாரஸ்ய நிகழ்வுகளைப் பகிர்ந்துள்ளார். தோனி 2004ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமானார். அதற்குமுன் ஆறு வருடங்கள் இளம் வீரராகவும், நடுத்தர குடும்பத்தினரின் மகனாகவும் இருந்தார். கிரிக்கெட் உபகரணங்கள் வழங்க பீ.ஏ.எஸ் தயாரிப்பு நிறுவன உரிமையாளர் சோமி கோலி ஆறு மாதங்கள் யோசித்திருக்கிறார். இதுதொடர்பாக அவர் கூறுகையில் “தோனிக்கு கிரிக்கெட் உபகரணங்களை கொடுத்து ஸ்பான்சர் செய்யுமாறு எனது டிலர்களில் ஒருவரான பரம்ஞ்சித் சிங் என்னிடம் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருந்தார். ஆறு மாதங்கள் யோசித்த பின்னர் 1998ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தோனிக்கு கிரிக்கெட் உபகரணங்களை ஸ்பான்சர் செய்தேன்.
அதன் பின் ஆறு வருடங்களுக்குப் பிறகு 2004 ஆம் ஆண்டு சட்டீஸ்கரில் அவரை சந்தித்தேன். அப்போது வங்காளதேச அணிக்கு எதிரான போட்டியில் அறிமுகமானார். அந்த போட்டிக்கு பின்னர் எனது வீட்டில் தங்குமாறு கூறினேன். என் அழைப்பை ஏற்று என் வீட்டிற்கு வந்த தோனியிடம் எனது மனைவி நீங்கள் யார் என்று கேட்டு விட்டார். உங்கள் மனைவியின் வார்த்தைகள் என்னை தூங்க விடவில்லை என அடுத்த நாள் தோனி கூறினார். அதன்பின் நடந்த பாகிஸ்தான் போட்டியில் அனைவரும் வியக்கும் வகையில் அதிரடியாக விளையாடி சதம் அடித்தார். அந்தப் போட்டிக்கு பின்னர் இரவு 11 மணிக்கு என்னை தொலைபேசி வாயிலாக அழைத்து, உங்களது மனைவியிடம் பேச வேண்டும் என தோனி கூறினார். அப்பொழுது ஆன்ட்டி எனது பெயர் தோனி என்று கூறினார். அதற்கு எனது மனைவி மகனே உனது பெயரை கிரிக்கெட் உலகமே சொல்லிக் கொண்டிருக்கிறது எனக் கூறிவாழ்த்தினார்” என்ற சுவாரசிய நிகழ்வை பகிர்ந்துள்ளார்.