இந்திய தயாரிப்பான கோவேக்சின் தடுப்பூசிக்கு விரைவில் அனுமதியளிக்கப்பட வாய்ப்புள்ளதாக உலக சுகாதார மையத்தின் தலைமை விஞ்ஞானி கூறியிருக்கிறார்.
இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனமானது, இந்திய மருத்துவ ஆய்வு கவுன்சிலுடன் சேர்ந்து கோவேக்சின் தடுப்பூசியை தயாரித்திருக்கிறது. தற்போது, இந்திய நாட்டில் கொரோனாவின் இரண்டாம் அலை குறைய தொடங்கியுள்ளது. எனினும் மூன்றாம் அலை விரைவில் பரவ வாய்ப்புள்ளதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் உலக சுகாதார மையத்தின் தலைமை விஞ்ஞானியான சௌமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளதாவது, கொரோனா தொற்றால் பலியாகும் சிறுவர்கள் எண்ணிக்கை குறைவாகவே இருக்கிறது. அதே சமயத்தில், சிறுவர்களுக்கு கொரோனா பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
உலக சுகாதார மையத்தின் நிபுணர்கள் குழு, இந்திய தயாரிப்பான கோவேக்சின் தடுப்பூசி குறித்து அதிக தகவல்களை பாரத் பயோடெக் நிறுவனத்திடம் கேட்டுள்ளது. இதனால் தான் கோவேக்சின் தடுப்பூசிக்கு அனுமதியளிப்பதில் தாமதம் ஏற்பட்டிருக்கிறது. அடுத்த மாதத்தில், கோவேக்சின் தடுப்பூசிக்கு அனுமதியளிக்கப்பட வாய்ப்புள்ளது என்று கூறியிருக்கிறார்.