உலக வரலாற்றில் அன்னையையும் இயற்கையையும் தெய்வமாக கருதி வழிபட்டு வந்துள்ளனர். “மாதா, பிதா, குரு, தெய்வம்” என நமது கலாச்சாரம் அன்னைக்கு தான் முதலிடத்தை வழங்கியுள்ளது. படைத்தவன் கடவுள் என்றால் நம்மை படைத்த அன்னையே நமக்கு கடவுள். அனைத்திற்கும் அடிப்படையானவள் அம்மா. அவள் இல்லை என்றால் இந்த மண்ணில் நம்மால் அவதரித்து இருக்க முடியாது.
மகளாக, சகோதரியாக, தோழியாக, தாரமாக, தாயாக வீட்டில் இருப்பவர்களை பக்குவப்படுத்தும் பாட்டியாக அனுபவங்கள் மூலம் வழி நடத்திச்செல்லும் ஆசானாக இப்படி எத்தனையோ பாத்திரங்களில் பெண்ணானவள் வலம் வந்தாலும் அன்னை என்ற ஒரு பாத்திரமே உன்னதமானது, ஈடு இணையற்றது. உலகில் இருக்கும் அனைவருக்கும் முதல் தெய்வம் அன்னை.
உலகத்திற்கு நம்மை அடையாளம் காட்டிய அன்னையை எந்த சூழ்நிலையிலும் கைவிடக்கூடாது. வயது முதிர்ந்த காலத்திலும் அன்போடு அன்னையை நடத்த வேண்டும் என்பதை உணர்த்தும் விதமாக வருடம்தோறும் மே மாதம் இரண்டாவது ஞாயிறு உலக அன்னையர் தினமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்த புனிதமான நாளில் நேரிலோ தொலைபேசி மூலமாகவும் நம்மை உலகுக்கு காட்டிய அன்னைக்கு மனமார வாழ்த்து கூறி ஆட்சியைப் பெற மறக்காதீர்.